நல்லிணக்கம் ஏற்பட்டாலே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும்; த.தே.கூ

tamil-news-sampanthanயுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதுடன் இனங்களுக்கு இடையில் முழு அளவிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச ரீதியாக இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களே அரசாங்கப் பிரதிநிதிகள் தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை அரசாங்கம் விளங்கிக்கொள்ளத் தவறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் நல்லிணக்க முனைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றது.

எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தென் ஆபிரிக்கா நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் யோசனை முன்வைத்திருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக அரசாங்கம் இந்த விடயத்தில் அந்தக் காலப்பகுதியில் எவ்வித ஆர்வத்தையும் காண்பிக்கவில்லை.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் அதனை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு சர்வதேச அழுத்தங்களே காரணம்.

இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கூட்டமைப்பு பிரதிநிதிகளே தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தனர்.

எது எவ்வாறு இருந்தாலும் நல்லிணக்க முனைப்புக்கள் முழு அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதன்படி நாட்டில் முழு அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலமே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும்.

எனவே குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்து முழு அளவிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அனைவராலும் ஏற்றுக்கொள்க் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply