ராஜீவ்காந்தியைக் கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் விஜித ரோஹண விஜயமுனி விடுதலை செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியுமானால், ராஜீவ் கொலையுடன் நேரடியாகத் தொடர்புபடாத தமிழர்கள் மட்டும் ஏன் விடுதலை செய்யப்படக் கூடாது என்றும் இலங்கைக்கு அவர்கள் ஏன் வரக்கூடாது என்றும் இலங்கை அரசும், சிங்கள ஊடகங்களும் அதனை எதிர்ப்பது ஏன் என்றும் தமிழ்ச் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறி வாளன், நளினி, ரொபேர்ட் ஆகியோர் தமிழக அரசால் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்த தீர்மானம், இலங்கைக்கு ஆபத்தானது என்றும் அவர்கள் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு வந்தால், வட பகுதியில் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கு தலைமை தாங்குவர் என்றும் அரச தரப்பை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் இலங்கை அரசும் தமிழக அரசின் அறிவிப்புக்கு அமைய கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்காக 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இலங்கைக்கு வந்த போது, கடற்படையினரால் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டிருந்த கடற் படை வீரர் விஜித ரோஹண விஜயமுனி, திடீரென ராஜீவ் காந்தியை தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால்தாக்க முயன்றார். ராஜீவின் தோள் பட்டையிலேயே தாக்கப்பட்டமையால் அவர் தப்பித்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர் விஜயமுனி கைது செய்யப் பட்டபோது, தான் ராஜீவை கொல்லும் நோக்குடனேயே தாக்கியதாகத் தெரிவித்திருந்தார்.
அவருக்கு ஆறு ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் இரண்டு ஆண்டுகளிலேயே அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்த்தனா, விஜய முனியை விடுதலை செய்திருந்தார். அதன் பின்னர் அவர் இரு தடவைகள் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
பாகுபாடு
இவ்வாறு இலங்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவைக் கொல்ல முயன்ற ஒருவர் இரண்டே ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியும் என்றால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பற்றரி வாங்கிக் கொடுத்தற்காகவும், முக்கிய கொலையாளிகளின் டயரியில் பெயர் இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு 23 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த தமிழர்களை விடுவிப்பதை இலங்கை அரசு எதிர்ப்பது ஏன் என்று தமிழ் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் அவர்கள் இலங் கைக்கு வருவதற்கு எதிரா கவும், அவர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு டையவர்கள் என்று புனை கதைகளையும் ஏன் பரப்பி வருகிறது என்றும் தமிழ் சிவில் சமூகம் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், சிங்களவர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயமா என்றும் சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















