ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை இன்று காங்கிரஸ் கட்சி அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஆந்திரா முதல்வர் பதவியில் இருந்து கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்து ஒருவாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொடர்ந்து முட்டுக்கட்டையே நீடித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய அரசை அமைக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். அனேகமாக இன்று அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் புதிய அரசு அமையும். மேலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் இரு கட்சிகளிடையே லோக்சபா தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
















