வெனிசுவெலாவின் தலை நகரமான கரகாஸிலும், வேறு பல பெரும் நகரங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தி வருகின்றனர். நீண்டகாலமாக இடம்பெறும் ஜனாதிபதி நிக்கொலஸ் மடுறோவின் இடது சாரி அரசாங்கத்திற் கெதிரான போராட்டத்தை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியைத் தழுவியுள்ளன. எரிந்த வண்ணம் காணப்படும் வீதித் தடைகளும், பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களுமென வெனிசுவெலாவின் பல நகரங்கள் காட்சியளிப்பதோடு 13 பேரின் உயிரையும் ஆட்சிக்கெதிரான சுதந்திரப் புரட்சி காவு கொண்டுள்ளது.
வெனிசுவெலாவில் எதிலும் நிரந்தரமும் நிச்சயமுமற்ற நிலைமை நிகழ்வதாகவும், பெறப்படும் ஊதியம் எதற்கும் போதாமையாக உள்ளதாகவும், ஆட்சி முறையில் மாற்றம் வேண்டி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் மாணவர் இயக்கத்தின் தலைவர் குறிப்பிடுகிறார். ஜனாதிபதி மடுறோ ஏற்பாடு செய்திருந்த தேசிய அமைதிக்கான உச்சி மாநாட்டில் எதிரணியினர் கலந்து கொள்ள மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரப் பிரச்சனையால் தாழ்ந்து கொண்டிருக்கும் வெனிசுவெலாவைக் காப்பாற்றும் நோக்கோடும், முழு மனதோடும் ஒழுங்கு செய்யப்படாது, பத்திரிகையாளருக்கு ஒரு சில படங்களை எடுப்பதற்கான வாயப்பை மட்டும் வகுத்துத் தரமுயலும் மாநாட்டில், கலந்து கொள்ள விரும்பவில்லையென எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான கென்றிக் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
March 2013 இல் முன்னைய ஜனாதிபதி குகோ சா(ch)வெட்ஸ் இன் மரணத்திற்குப் பின் நிக்கொலாஸ் மடுறோ ஜனாதிபதியாகப் பதவியேற்றார் என்பதும், பதவியேற்கும் வரை குகோவின் மந்திரி சபையில் வெளிவிவகாரச் செயலராகக் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெனிசுவெலாவின் தூதராலயத்தில் கடமை புரிந்த மூன்று உத்தியோகத்தரை அமெரிக்கா நாடு கடத்துவதற்கும், கவானா (Havanna) தன் வெனிசுவேலாவின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட விரும்பாத காரணத்தால் அங்கு நிறுத்தப் பட்டிருந்த தன் படையினரைத் திருப்பி அழைப்பதற்கும், சுதந்திரப் புரட்சி காரணமாகி, வெனிசுவெலாவின் அரசியலை உலக மயமாக்கியுள்ளது. கியூபா நாடு வெனிசுவெலாவின் நட்பைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
















