13 ஆவது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனிவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக்கோர முயற்சிக்கின்றனர். பிரிவினைவாதச் சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள்சபை எமக்கு எதிராக நேரடியான பொருளாதாரத் தடையை விதிக்க முடியாது. இதற்காக பாதுகாப்புச்சபையினதும், பொதுச் சபையினதும் அங்கீகாரம் பெறவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் எம் மீது பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட ஒன்றாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
13வது திருத்தச்சட்டம் மற்றும் இலங்கைக்கு எதிரான ஜெனிவா மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் ரோஹித்த அபய குணவர்த்தன, அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க ஆகியோர் நேற்று முன்தினம் கருத்து வெளிட்டபோதே இவ்வாறு கூறியுள்ளனர். அமைச்சரவை என்ற வகையில் கூட்டுப் பொறுப்பை எதிர் கொள்ள வேண்டுமென்றும், தனி நபர்களாக அல்லது குழுக்களாக கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமில்லை. அமைச்சரவைக் குழுவாகப் பேசுவதே பொருத்தமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் விரும்பியதை தற்பொழுது அடைவதற்கு முயற்சிக்கும் சர்வதேச சக்திகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழ வேண்டியதே தற்பொழுது நாட்டில் அவசிய விடயமாகும் என்று அவர்கள் கூறினர். எமக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுமானால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையின் அங்கீகாரமும் இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
















