போர்க்குற்றவாளி ராஜபக்சவை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:–
மியான்மரில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க அடுத்தவாரம் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர் வரும் 4 ஆம் திகதி சந்திக்க இருப்பதாக வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2 முறை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.
மார்ச் 3 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே எழுந்திருக்கும் இத்தகைய சூழலில், போர்க்குற்றவாளியாக கருதப்பட வேண்டிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசவிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
போர்க்குற்றவாளிகளை தண்டிக்கவோ அல்லது மனித உரிமைச் சூழலை மேம்படுத்தவோ இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் ராஜபக்சேவை பிரதமர் சந்திப்பதற்கான தேவை என்னவென்று தெரியவில்லை.
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரும் பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது. எனவே, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை மியான்மர் மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கக் கூடாது.
மாறாக, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















