தமிழர் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போதே ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து , பண்டார வன்னியன் தென்மோடி நாடகக் கூத்து என்பன மேடை ஏற்றப்பட இருந்தன.
எனினும் அதற்கான ஒத்திகை பார்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறான நாடகங்களை மேடையேற்ற முடியாது என்றும் இவை விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என்றும் கூறி நாடக குழுவினரை ஊர்காவற்துறையினர் எச்சரித்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கலைகளை பிரதிபலிக்கும் நாடகங்கள், வரலாற்று நாடகங்களை மேடையேற்றுவதற்கோ பொலிஸார் தடைவிதிக்க முடியாது. அவ்வாறு நாம் செய்யவும் மாட்டோம்.
இருப்பினும் ஊர்காவற்துறை சம்பவம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது. அவ்வாறு ஒரு முறைப்பாடும் எமக்கு கிடைக்கவில்லை என்றார்.
















