பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட தாய்த் திருநாட்டைக் காட்டிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்துக்கு அடிபணிந்துவிட முடியாது, சர்வதேச அழுத்தங்களுக்கு பதில் கொடுக்க எமது மக்கள் தயாராக வேண்டும்.
வெளிநாட்டுத் தூதரகங்களின் பணத்தைப் பெற்று செயற்படுவோர் நாட்டில் ஜனநாயகமில்லை, சுதந்திரமில்லை என பிரசாரம் செய்கின்றனர்.
ஜனநாயகம் இல்லாமலா யாழ்ப்பாணத்தில் நாம் தேர்தல் நடத்தினோம் என அவர் கேள்வி எழுப்பியதுடன் ,அரசாங்கம் தோற்றாலும் அந்த மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதை கடமையாக்கிக் கொண்டு நாம் செயற்பட்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகையில் பாதைகள், பாலங்கள் அமைப்பது அபிவிருத்தியில்லை என விமர்சிக்கின்றனர்.
நாம் மக்களுக்கான தேவையை நிறைவேற்றி வருகையில், பலர் பல பகுதிகளிலிருந்தும் எமக்கு சேறுபூசும் விதத்தில் செயற்படுகின்றனர்.
மூன்று தசாப்தங்களாக நாட்டைச் சீரழித்த யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். எனினும் அதற்கெல்லாம் நாம் தற்போது ஜெனீவா நாட்டுக்குப் பதில் கூற நேர்ந்துள்ளது.
நாம் ஜெனீவாவிற்குப் பதில் கொடுப்போம். நாம் பதில் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவர்கள் நினைத்ததை அவர்கள் செய்வார்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் இதை வைத்து சில சக்திகள் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றனர்.
நாடு முழுவதிலும் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். படிப்படியாக மக்களை அச்சத்துக்குள்ளாக்கி மக்களை வீதிக்கு இறக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். அதுவே அவர்களின் எதிர்பார்ப்பு. நான் ஜெனீவா போயிருந்த போது கியூபாவுக்கு எதிராக 60 தடவைகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கியூபா ஜனாதிபதி என்னிடம் கூறினார்.
அதேபோன்று இஸ்ரேலுக்கு எதிராகவும் இதுபோன்றே இடம்பெற்றுள்ளது. அந்நாட்டுக்கு எதிராகவும் 65 தடவைகளுக்கு மேல் ஜெனீவா மனித உரிமைப் பேரவை குற்றஞ் சுமத்தியுள்ளதை அறிய முடிகிறது. அதனால் ஐ. நா. அமைப்பிலிருந்து அந்நாடு விலகி விட்டதாக அந்நாட்டுத் தலைவர் தெரிவித்தார் என மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியதுடன்,
ஜெனீவா எதனைச் செய்தாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. இதனை நான் சரி என்று கூறி அங்கீகரிக்க முடியாது. எனினும் இதுதான் தற்போது உலக நாடுகளில் உள்ள நிலைமை. எமக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் வரும். கடந்த வருடமும் கொண்டு வரப்பட்டது. இந்த வருடமும் கொண்டு வருவர். எனினும் எம்மில் சிலர் இதனைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதில் சொல்ல வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















