சுதந்திர ஈழமே எங்களின் இலக்கு. அதற்கான சூழல் கனிந்து வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை என்று இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால், ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கும். இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கும். இவ்வாறு தெரிவித்தார் மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ.
இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் நடத்தி வரும் ரெளத்திரம் இதழின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் வைகோ.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் வெல்லப்பட முடியாத படைகளைக் கொண்டவர்கள். ஆனால் இலங்கை அரசுக்குப் படைகளையும், ஆயுதங்களையும் வழங்கி, திட்டங்களையும் இந்தியா வகுத்துக் கொடுத்ததால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர்.
தமிழர்களுக்கு துரோகம்
வாஜ்பாய் ஆட்சி காலத்தில்
இலங்கை அரசுக்கு எந்த ஆயுதமும் வழங்கமாட்டோம் என்று உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. அதேபோன்று ஆயுதங்கள் எவையும் கொடுக்கப்படவும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அப்படித் தமிழர்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்றே ஈழத் தமிழர்கள் விரும்புகின்றனர்.
ஈழம் இலக்கு
சுதந்திர ஈழமே எங்களின் இலக்கு. அதற்கான சூழல் கனிந்து வருகிறது. இந்தியாவிலும் விடுதலைப்புலிகளான தடை நீங்கும். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, அமையப் போகும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் அந்தச் சூழல் உருவாகும் – என்றார் வைகோ.
















