ராஜிவ் காந்தி சிலை உடைப்பு: அச்சத்தில் மக்கள்

rajiv
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள 7 பேர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று காங்கிரஸ் தரப்பில் எதிர் போராட்டமும் பல்வேறு இடங்களில் நடந்தது.

இது தொடர்பாக சென்னை காங்கிரஸ் அலுவலகம் மற்றும் குமரி மாவட்டம் திருவட்டாரில் காங்கிரஸ் கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து நேற்று நெல்லை ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

நெல்லை சந்திப்பில் காங்கிரசாரின் கொடும் பாவியை எரித்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடையம் பகுதியில் ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரையும் நேற்று இரவு பொலிஸார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கடையம் அருகே உள்ள வடக்கு பாப்பான்குளம் மெயின் ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தியின் அரை உருவ சிமெண்டு சிலையில் தலை பகுதி துண்டாக உடைத்து வீசப்பட்டு இருந்தது.

இன்று காலை வடக்கு பாப்பான்குளம் மெயின் ரோட்டுக்கு வந்த பொது மக்கள் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடினார்கள். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ் செல்வன் உள்பட முக்கிய தலைவர்களும் அங்கு கூடி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட பொலிஸ் அதிகாரி நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில், துணை பொலிஸ் அதிகாரி மணிமாறன், கடையம் இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி உள்பட ஏராளமான பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அமைதிப்படுத்தினார்கள். அங்கு அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது தொடர்பாக கடையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: , ,

Leave a Reply