நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கும் விசிலடிச்சான்களுக்கு அதிக பட்ச லட்சியம் ஒன்றே ஒன்றுதான்.
அண்ணன் கட்சி ஆரம்பிப்பார்…
நாம மாவட்டச் செயலாளராகவோ…
மந்திரியாகவோ ஆகிடலாம்…
– இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போகும்போது சில ரசிகர்கள் பொழப்பைப் பார்க்கப்போய்விடுவார்கள்.
சில ரசிகர்கள் ஏதாவது அரசியில் கட்சியில் சேர்ந்து பொழக்கப்போய்விடுவார்கள்.
மக்கள் இயக்கம் என்ற மயக்க பிஸ்கட்டைக் கொடுத்து, ‘அடுத்தது அரசியல் கட்சிதான்’ என்று ரசிகர்களை மயக்கத்தில் வைத்திருந்தார் விஜய்.
‘தலைவா’ படத்துக்கு அம்மா வைத்த ஆப்பில் அரசியலை மறந்துபோனார்.
இதற்கிடையில் மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இளையதளபதி வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள் ‘ரசிகர் மன்றக் கடை’யை காலி பண்ணிவிட்டு பிற கட்சிகளில் சேரத்தொடங்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த அமைப்பு முழுமையாக கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்துள்ளனர். தாராபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, விஜய் மீதும், தலைமை ரசிகர்மன்ற நிர்வாகிகள் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளையும் கூறி இருக்கின்றனர்.
இதுகுறித்து ஜாபர் சாதிக் என்ன சொல்கிறார்…?
‘தாராபுரம் நகர பொறுப்பாளர்கள் அனைவருமே இளைய தளபதி மக்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டோம். இளைய தளபதி இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் சிலர் விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. இது தொடர்பாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பல முறை தபால் எழுதியும் பயனில்லாமல் போய்விட்டது. இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் இந்த இருவரும் வைத்ததுதான் அங்கு சட்டமாக உள்ளது. விஜய்யும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்.’
என்றதோடு இன்னொரு பகீர் தகவலையும் சொல்லி இருக்கிறார் சாதிக்.
‘விஜய்யின் அப்பா சந்திரசேகரோடு நெருக்கமாக இருப்பவர்களும் இயக்கத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். காசு இருப்பவர்கள் மட்டுமே அங்கே காலம் தள்ளமுடியும் என்பதால் நாங்கள் வெளியேறினோம்.’
சில தினங்களுக்கு முன் தமிழ்ஸ்கிரீன்.காம் வெளியிட்ட செய்தி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்பாக்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்த கதாநாயகர்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் விஜய் தன் அப்பா எஸ்.ஏ.சி.யை ஓரங்கட்டி வீட்டில் உட்கார வைத்த தகவலை குறிப்பிட்டிருந்தோம்.
நாம் வெளியிட்ட செய்தியின் சாரம்சமே சாதிக் தரப்பின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ள ‘தாராபுரம் நகர விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களைத் தொடர்ந்து, மேலும் 13 மாவட்டங்களில் உள்ள விஜய் மன்றப் பொறுப்பாளர்கள் ‘ஆம் ஆத்மி’யில் இணைய இருக்கிறார்கள். விரைவில் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களும்மொத்தமாக மன்றங்களை கலைத்துவிட்டு, ‘ஆம் ஆத்மி’யில் இணைய இருக்கிறார்களாம்.
















