
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அவர்களது கருணை மனு மீது தாமதமாக ஜனாதிபதி முடிவு எடுத்ததால் தண்டனை குறைக்கப்பட்டதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 3 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டனர். எனவே அவர்களையும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட், பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. முதலில் 3 பேர் விடுதலையை எதிர்த்தும், பின்னர் 4 பேர் விடுதலையை எதிர்த்தும் அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணை வருகிற 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே 7 பேர் விடுதலையை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் கோர்ட்டுக்கு செல்லமுடியாது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
6–ந் திகதி மற்ற மனுக்களுடன் சேர்ந்து இந்த மனு மீதான விசாரணையும் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தார்.
















