சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய வலுவானதும் செயற்பாட்டு ரீதியானதுமான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 281 கிறிஸ்தவ மதகுருமார்கள், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு ஆவணங்களை அவர்கள் உறுப்பு நாடுககளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இது தொடர்பில் மதகுருமார்களால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், இதற்கு முன்னர் மனித உரிமை சபையின் 19 ஆவது மற்றும் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடியான மற்றும் கேட்டறிந்த அனுபவங்கள் எமக்குள்ளது. எமது சொந்த அனுபவங்களையும் நாம் கண்டறிந்த விடயங்களையும் நாங்கள் ஐ.நா நிபுணர்கள் குழு,ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், நன்கு அறியப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளிடம் பரிந்துரைத்துள்ளோம்.
நடைமுறைப்படுத்தாத அரசு
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் கடந்த 5 வருடங்கள் உள்நாட்டுக்கட்டமைப்பின் ஊடாக உண்மை மற்றும் நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
மறுபுறம் உள்நாட்டு வழி முறையில் ஈடுபடுமாறு வலியுறுத்தும் நாங்கள் உட்பட ஏனையோர் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப்பட்டு வருகின்றோம். வரையறுக்கப்பட்ட பரிந்துரைகளைச் செய்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் நடை முறைப்படுத்தப்படவில்லை.
தொடரும் மீறல்கள்
குறைந்த பட்சமாக இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவேண்டும், இறந்தவர்களுக்கான பொதுவான நினைவுதினம் அனுஷ்டிக்கப் படவேண்டும் என்ற பரிந்துரைகள் கூட இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
காணாமற்போதல்,பாலியல் துஷ்பிரயோகங்கள்,பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான கைதுகள், தடுத்து வைத்தல், சித்திர வதைகள்,ஒன்று கூடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றன. அத்துடன் மதச் சுதந்திரமும் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது.
தேசத் துரோகிகள்
அரசை விமர்சிப்பவர்கள், அதன் கொள்கைகளுக்குச் சவால் விடுப்பவர்கள், மனித உரிமைகளை ஊக்குவிப்போர் அது சம்பந்தமாகச் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோர் பயங்கரவாத ஆதரவாளர்கள் அல்லது தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.
இவர்கள் அரச பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு இடையூறுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை காரணமாக வைத்து எங்களில் சிலரும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















