சிதம்பரம் அருகே கல்லால் தாக்கி விவசாயி படுகொலை- 2 பேர் கைது

சிதம்பரம் அருகே சண்டையை விலக்கச் சென்ற விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியபட்டு காட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யார்(வயது 74). விவசாயி. இவரது தம்பி கலியபெருமாள். இவரது மகன்கள் ராமசந்திரன்(41), தண்டபாணி(48).

நேற்று மாலை அய்யார் தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே ராமச்சந்திரனும், தண்டபாணியும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர்.

இதைபார்த்த அய்யார் ஏன் தகராறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று 2 பேரிடமும் கேட்டார். மேலும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனும், தண்டபாணியும் சேர்ந்து அய்யாரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.

இதில் அய்யாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அய்யாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலை மோசமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அய்யார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விவசாயியை தாக்கி கொலை செய்த ராமச்சந்திரன், தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர்.

சண்டையை விலக்கச் சென்றவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!