கிளிநொச்சியில் 36 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகக் காணி உரிமையாளர்களால் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சியில் ஏ-9 பிரதான வீதிக்கு அண்மையாகவுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்திலேயே 36 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் மக் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 522 ஆவது படையணிக்கான தலைமையகம் அமைப்பதற்காகக் குறித்த காணி சுவீகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகக் காணி உரிமையாளர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் வவுனியா பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் இராணுவத்தினர் தமது காணியை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளனர் என உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த காணியில் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த காலப் போர்ச் சூழலால் மேற்படி பிர தேசத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அத்துடன் 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி தாம் மீளக் குடியமர்த்தப்பட்ட போது, மேற்படி காணி இராணுவத்தினர் வசம் இருந்ததாகவும் அவர்கள் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பின்னர் தமது காணியை மீட்பதற்கு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஊடாக முயற்சி செய்ததாகவும், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் மாதாந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டியதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காணிகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே தமது காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கு எந்த நஷ்டஈடும் தேவையில்லை எனவும், சொந்தக் காணியே மீளத்தரப்படவேண்டும் என்றும் அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்
















