தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலைசெய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஆகவே முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுடையதாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளது. தருணம் பார்த்து அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில்கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் எலும்புக்கூடுகள் தான் அவையெனவும் அதற்கான சாட்சியாக பொதுமகன் ஒருவரின் வாக்குமூலமொன்று கிடைக்கப்பெற்றிருப்பதாக தகவல் வெளயிடப்பட்டிருக்கின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மக்கள் பாதுகாப்பு வலயங்கள் பல உருவாக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மக்கள் பாதுகாப்பு வலயங்களில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களினால் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் அப் பாதுகாப்பு வலயத்தினுள்ளும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் புதைக்கப்பட்டன என்பதற்காகன சாட்சியங்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் பொதுமக்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்களை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதனை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு போதும் பொதுமக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என கேள்விப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததுமில்லை.
அரசாங்கம் தற்போது ஜெனிவாவில் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலையில் நாட்டின் பலபாகங்களிலும் மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தருணம் பார்த்து விடுதலைப்புலிகளின் மீது பழியைச் சுமத்தி அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கின்றது. எவ்வாறாயினும் குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள் ளப்படுவதோடு மேலும் அப்பகுதியில் மீட்புப்பணிகளை தொடரும் பட்சத்தில் உண்மை வெளிப்படும் என்று குறிப்பி ட்டுள்ளார்.
















