சின்ன பட்ஜெட் படங்களின் புரமோஷனுக்கு வரமாட்டேன்! – இசையமைப்பாளர் இமான் பிடிவாதம்..!

immanவிஜய் கதாநாயகன், அன்றைய உலக அழகி ப்ரியங்கா சோப்ரா கதாநாயகி, ஜிவி புரடக்ஷன்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு..

– என ‘தமிழன்’ படத்தில் இசையமைப்பாளர் இமானின் அறிமுகம் என்னவோ அமர்க்களம்தான். ஆனால் தொடர்ந்து அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தமிழன்’ படத்தின் படு தோல்வி, அப்படத்துக்கு இசையமைத்த இமானையும் பதம் பார்த்துவிட்டது.

அதன் பிறகு பல படங்களுக்கு அவர் இசையமைத்தாலும், அவை சொல்லிக்கொள்ளும்படியான படங்களில்லை.

அதேசமயம், திரையுலகில் அவரது இருப்பை உறுதி செய்தவை சின்ன பட்ஜெட் படங்கள்தான்.

இப்படி இருந்த இமானின் கேரியர் கிராஃப் ‘மைனா’ படத்துக்குப் பிறகு ஜிவ்வென உயர்ந்தது.

‘கும்கி’ அவரை மேலும் உயரத்தில் அமர்த்தியது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ‘ஊதாகலரு ரிப்பன்’ இமானை உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டது.

‘தமிழன்’ படத்துக்குப் பிறகு இமானை ராசியில்லாதவராகக் கருதிய விஜய்யே ‘ஜில்லா’ படத்துக்கு அழைத்து இசையமைக்க வாய்ப்பளித்தார்.

இமான் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டது. சந்தோஷம்..!

அதற்காக இத்தனை காலமாக தன்னை வாழ வைத்துக் கொண்டிருந்த சின்ன பட்ஜெட் படங்களை சீப்பாக நினைக்கலாமா இமான்?

கடந்த வாரம் வெளியான ‘அமரா’ படம் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். அதற்கு இமான்தான் இசையமைப்பாளர்.

வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்து, அல்லல்பட்டு, கடந்த வாரம் அமரா படம் வெளியானபோது, அப்படத்தின் புரமோஷனுக்கு இமானை அழைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

அமரா படத்தின் கதாநாயகன், கதாநாயகி புதுமுகங்கள் என்பதால் பிரபலமுகமான இமான் வந்தால் படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

‘சின்ன பட்ஜெட் படங்களின் புரமோஷனுக்கு வந்தால் என் இமேஜ் என்னாவது?’ என்று வர மறுத்துவிட்டாராம் இமான்.

தயாரிப்பாளர் கெஞ்சிக் கேட்டு இமான் தன் பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவில்லையாம்.

கர்த்தரே இவர்களை மன்னிப்பாயாக…! ஆமென்!

Tags: ,

Leave a Reply