மக்களின் பொருளாதாரத்தை மழுங்கடிக்கும் வகையில் காணிகளை அபகரிக்கும் இராணுவம் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
இராணுவம் வெளியேறினால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியயழுப்புவதுடன் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்.
முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாய விழா நேற்று ஒட்டுசுட்டான் தட்டயா மலைப்பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களுக்கு நிர்வாக ரீதியாகப் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையிலேயே வட மாகண சபையின் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
முன்னர் முத்தையன்கட்டு, விவசாயத்துக்கு பெயர் பெற்ற அதிகளவு உற்பத்தியை தேடித் தந்த ஒரு கிராமமாக இருந்தது. இப்போது அந்த நிலைமை மாற்றப்பட்டு விட்டது.
பொருளாதார ரீதியாக உயர்ந்திருந்த எமது சமூகம் தற்போது கடனாளி சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. நான் குறிப்பிடுவது முத்தையன் கட்டை மட்டும் அல்ல. வடமாகாணத்திலுள்ள விவசாயிகள் அனைவரினதும் நெருக்கடிகள் பற்றி எனக்கு நன்கு தெரியும்.
நாங்கள் மாகாணசபையை பொறுப்பேற்றிருக்கிறோம். ஆனால் நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிர்வாக ரீதியாக ஏராளமான தடங்கல்கள் வந்துள்ளன.
இதனால் மக்களுக்கு சேவையை வழங்குவதில் நெருக்கடியாக உள்ளது. இவை தவிர இராணுவத்தினர் கையகப்படுத் தியுள்ளதை விடுவிப்பதிலும் நெருக்கடிகள் தொடர்கின்றன. இராணுவம் வட பகுதியை விட்டு வெளியேறுவதன் ஊடாகவே எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்றார்.
















