இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்துச் செல்வது தமக்கு மிகுந்த வேதனையை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வரும் 13-ம் திகதி கொழும்பில் இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 3-ம் திகதி, பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பாக்கு நீரிணை பகுதியில், 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 153 மீனவர்களையும் 39 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தூதரக அளவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
















