இலங்கையில் பெண்களுக்கான அங்கீகாரம், பாதுகாப்பு, மற்றும் சுதந்திர செயற்பாடு என்பதெல்லாம் மகளிர் தினநாளின் வெறும் கோஷங்களாகவே உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினையிட்டு அவர்; விடுத்துள்ள ஊடக அறிக்கையில், உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது.
உலகம் அறிவியல் ரீதியில் உச்சங்களை தொட்டு வரும் நிலையில், பரந்த அளவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும், கீழ்த்தரமான அவமதிப்பு செயற்பாடுகளும் தீவிரமாகி வருவதை ஊடகங்கள் ஊடாக அறியும் போது நாம் உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனையை தொலைத்து வாழ்கின்றோமா? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாதுள்ளது.
உலக இயக்கத்தின் அனைத்து வடிவங்களிலும் பெண்களின் ஆற்றலும், பங்கும், ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டு வரும் அதே சூழலில் அவர்களை ஒரு சமநிலைத் திறன் கொண்ட பிறவிகளாக அங்கீரித்து மதிப்பளிக்க மறுப்போரை மனித இனத்தவராக கணிக்க முடியாதேயுள்ளது.
குறிப்பாக இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலங்கள் பெண்கள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்கள் என்று பெருமை பேசிக்கொண்டாலும் கூட பெண்களுக்கான மனிதஉரிமை சமநிலை என்பது அதன் அர்த்த பூர்வ அந்தஸ்தை ஒரு போதும் எட்டியது இல்லை. குறிப்பாக சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லும் தரமன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
















