ரஜினி நடிக்கும்… இல்லை.. இல்லை.. ரஜினி பொம்மை நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீடு மார்ச் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
ஷாருக்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
சினிமாக்காரர்களின் கல்யாணம், காதுகுத்து நிகழ்ச்சிகளையே காசு கொடுத்து வாங்கி டி.வி.சேனல்கள் ஒளிபரப்பும் கேடுகெட்ட சூழல் நிலவும் காலமிது.
‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டுவிழாவை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
‘கோச்சடையான்’ இசைவெளியீட்டுவிழாவை ஒளிபரப்பும் உரிமையை வாங்க பல சேனல்கள் முட்டிமோதிப் பார்த்தன.
ஆளும்கட்சி சேனலான ஜெயா டி.வி. கொத்திக் கொண்டு போனது.
இதுபோன்ற திரைப்பட விழாக்களின் ஒளிபரப்பு உரிமை பெற்றால், அவ்விழாக்களுக்கு மற்ற ஊடகங்களையே அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படியே அனுமதித்தாலும், அச்சு ஊடகங்களுக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும். காட்சி ஊடகங்களை (விஷூவல் மீடியா) அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த விஷயங்களை அறிந்திராத ‘கோச்சடையான்’ படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டுவிழாவை யு ட்யூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டது.
ஹிந்தியில் பல படங்களைத் தயாரித்திருக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல் தான் தயாரிக்கும் ஹிந்திப்படங்களின் விழாக்களை யு ட்யூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது.
அந்த அடிப்படையிலேயே ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டுவிழாவையும் யு ட்யூப் மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது.
இவ்விஷயம் ஜெயா டி.வி.க்குத் தெரிய வர, அதன் நிர்வாகிகள் கடுப்பாகிவிட்டார்களாம்.
‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டுவிழா ஒளிபரப்பு உரிமையை சில கோடிகள் கொடுத்து வாங்கி இருக்கிறோம். அதன் அத்தனை உரிமையும் எங்களுக்குத்தான். யூ ட்யூப் உட்பட எதிலும் ஒளிபரப்பும் உரிமை உங்களுக்குக் கிடையாது’
– என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி, யு ட்யூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் ஈராஸின் திட்டத்துக்கு தடை போட்டுவிட்டனர்.
















