எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளைப் பிரதானமாக நம்பிப்பயனில்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே தீர்க்கதரிசனமாக கூறி வந்த உண்மை சரியென மறுபடியும் ஒருமுறை உணர்த்தப்பட்டிருக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ்பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.
நாம் சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பியிருக்க முடியாது. தேவையென்றால், பிரசவத்தின்போது ஒரு மருத் துவிச்சியின் கடமையை ஆற்றுவதுபோல், சர்வதேச நாடுகள் முன்வந்தால் அதை வரவேற்கலாம். ஏனெனில், எமது மக்கள் சுமந்த வலிகளையும், வதைகளையும் நாம் மட்டுமே உணர்வோம்.
எனவே எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்புணர்வு எமக்கு மட்டுமே இருக்க முடியும்.
இதையே நாம் நீண்ட காலமாக, தொலை தூரநோக்கில் தீர்க்க தரிசனமாகக் கூறி வருகின்றோம்.
ஆனாலும், சர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும், உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும், உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தைக் காட்ட தமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை கூறி வந்திருக்கிறது.
ஆனாலும், இன்று நடந்து வரும் மனித உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப்போவதில்லை என்றும் தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து, எமது மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடித்து, ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து வருகிறது.
நாம் ஏற்கனவே தீர்க்கதரிசனமாகக் கூறி வந்த உண்மைகளை ஏற்று நடந்திருந்தால், அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமேதீர்க்க வேண்டும் என்ற எமது நடைமுறை சாத்திய வழிமுறைகளை விரும்பியிருந்தால் உலக நாடுகள் எமது மக்களை ஏமாற்றி விட்டதாக இன்று அழுது புலம்பி, நாடகம் ஆட வேண்டிய அவசியம் இங்கு நடந்திருக்காது-என்றார்.
















