இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை: தமிழ் நாட்டிலிருந்து 30 பேரடங்கிய பிரதி நிதிகள் குழு வருகை

srilankan fishersஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் நாட்டிலிருந்து 30 பேரடங்கிய பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்

தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்கு வருவதன் பின்னணியில் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து மேலும் தெரிவிக்கையில்

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற இரு நாடுகளின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது 5ஆம் அம்ச திட்டங்களில் இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய மார்ச் 10ஆம் திகதிவரை இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைகளை மீறுவதில்லையென்றும் மார்ச் 10 ஆம் திகதி தமிழ்நாட்டு மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மீனவச் சங்கங்களின் பிரதி நிதிகள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது.

ஆனால் தமிழக அரசின் சில நடவடிக்கைகள் காரணமாக அக் குழு இன்று 10ஆம் திகதி வர முடியாது போனது. ஆனால் எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் நாட்டு அதிகாரிகளும் மீன் பிடிச் சங்கங்களை சேர்ந்த 11 பேரும் இலங்கை வந்து 13ஆம் திகதி வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை இந்திய மீனவர் நலன்புரிச் சங்கத் தலைவர் என். தேவதாஸ் ராமேஸ்வரத்திலிருந்து அறிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் நன்னீர் மீன் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைகளுக்கு அமைய அமைச்சின் அதிகாரிகளும் சங்கப் பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றனர்.

இதன் போது இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்படும். ஏற்கனவே ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பேச்சுக்களின் போது மார்ச் 10 ஆம் திகதிவரை இரு தரப்பு மீனவர்களும் கடல் எல்லைகளை மீறுவதில்லையென இணக்கம் காணப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் உந்துதல் காரணமாகவே எமது எல்லையில் விசை படகுகள் மூலம் மீனவர்கள் அத்து மீறியதோடு தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். எனவே தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இங்கு இடம்பெறும் பேச்சுக்களின் போது இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply