துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் இன்று பாடசாலை புத்தக பைகளை சுமந்து கொண்டு பாடசாலை சென்று கல்வி கற்கின்றார்கள் இந்த நிலைமையை எற்படுத்தியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை யாரும் மறந்துவிடமுடியாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
நுவரெலியா பொது மைதானத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதக்கீடு தொடர்பில் தெளிவுபடுத்தும் பேதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் பொருளாதார பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அமைச்சர்களான சீ.பீ.ரட்ணாயக்க,நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பழனி திகாம்பரம், ஸ்ரீரங்கா, பி.ராஜதுரை மற்றும் மாகாண சபை பிரதேச சபை மாநகர சபை நகர சபை உறுப்பினர்கள்உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,
நுவரெலியா மாவட்டத்திற்கு 1723 மில்லியன் ரூபாவை 2014 ஆண்டிற்கு திவிநெகும, கிராம அபிவிருத்தி, கமநெகும, புறநெகும, விவசாயம்,பாடசாலை, வனவள பாதுகாப்பு, உட்பட இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நாம் பாரிய ஒரு நிதியை ஒதுக்கியுள்ளோம்.
இவ்வாறான ஒரு பாரிய நிதி இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கபடுவது இதுவே முதல் முறையாகும். நாங்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு வருகின்றோம். ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் தேவையற்ற தடைகளை விதித்து இந்த அபிவிருத்தி பணிகளை முடக்குவதற்கு தயாராகின்றனர்.
அன்று யுத்தம் நடைபெற்ற பொழுது இந்த அமைப்புகள் எல்லாம் எங்கே இருந்தார்கள்.இன்று எமக்கு நாட்டையும் இந்த மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்வதற்கு பதிலாக இதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றார்கள். ஆனால் அது நடைபெறாது. எமது அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு நாம் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க தயாராகவுள்ளோம். கடந்த காலங்களில் வரவு-செலவுத் திட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து இரகசியமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு அறிக்கையாகும்.
ஆனால் நாம் இன்று அப்படி செய்யவில்லை. இதனை மக்களிடம் எடுத்து வந்து அவர்களின் கருத்துக்களையும் இது தொடர்பான நிபுணத்துவம் பெற்ற அரச அதிகாரிகளின் கருத்துக்களையும் உள்வாங்கிய ஒரு சிறந்த வரவு செலவு திட்டமாகவே தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நாம் 160 கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.இதுவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காக நாம் கருதுகின்றோம்.
நாட்டின் அபிவருத்தியில் அனைவரது பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக கிராமப்புற மக்களுடைய ஒத்துழைப்பு இன்றி எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு.
நாம் பாதைகளை அபிவிருத்தி செய்வதை எதிர்கட்சியினர் ஒரு கேலிக்கூத்தாக எல்லா மேடைகளிலும் பேசிவருகின்றனர். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. பாதை அபிவிருத்தியின் மூலமே இன்று பல உலக நாடுகள் பாரிய அபிவிருத்தியை கண்டிருக்கின்றது என்று. இன்று இலங்கையில் எந்த இடத்திற்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நினைத்த மாத்திரத்தில் சென்று வருவதற்கான சந்தர்ப்பததை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவே ஒரு நாட்டினுடைய உண்மையான அபிவிருத்தி.கிராமங்களில் அபிவிருத்தியை முன்னெடுத்து வேலைகள் நிறைவடைந்த பின்பு அதனை திறந்து வைத்ததன் பின்பு அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் பாதுகாத்து கொள்வதற்கும் அங்குள்ள மக்கள் மன்வர வேண்டும். இல்லாவிட்டால் நாம் முன்னெடுக்கின்ற அபிவிருத்தியில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.கிராமம் அபிவிருத்தி அடைந்து அதன் மூலம் நகரம் அபிவிருத்தி அடைய வேண்டும் இதன் மூலம் நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே மகிந்த சிந்தனையின் எதிர்பார்ப்பு.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எல்லாம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த சிந்தனையின் ஊடாக மக்களிடம் பெற்றுக் கொண்ட ஆனைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன.புலிகளுடன் பல முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும் அதற்கு அவர்கள் இணங்கவில்லை நாம் எமது படைவீரர்களின் உயிரை தியாகம் செய்தே இந்த சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
எமது நாட்டில் நாள்தோறும் குண்டுகள் வெடித்து பொது மக்கள் உயிரிழந்த பொழுது இந்த மேற்குலக நாடுகள் அதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை இது கவலைக்குறிய விடயமாகும்.
தற்பொழுது சமாதானம் எற்பட்டு அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் பிள்ளைகளின் புதல்வர்களாக இன மத பேதங்களை மறந்து செயல்படுகின்ற பொழுது அதனை பொறுக்காத ஒரு சில மேற்குளக நாடுகள் இதனை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர்.அவர்களின் அந்த பகல் கனவு என்றும் நிறைவேறாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரியிடம் நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆவணத்தை உத்தியோக பூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது
















