இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா முன்றலில் நேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்தும், ஐரோப்பாவின் பல்வேறு தேசங்களிலிருந்தும் அலையெனத் திரண்டு வந்த மக்கள், ஐ.நா முன்றலிலுள்ள முருகதாசன்திடலில் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் ஐ.நாவுக்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் எரித்தனர். அத்துடன் வீதிக்கு குறுக்காக நின்று “மஹிந்த ஒரு போர்க்குற்றவாளி’ என்றும் கோசம் எழுப்பினர். ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கும்வரை பொலிஸார் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். எனினும் அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை முற்றாக மூடிக் கொண்டமையால் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர். ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு மறுத்தமையால் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை அங்கிருந்து அகற்றினார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த தீர்மான வரைவில் சர்வதேச விசாரணை உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், தீர்மான வரைவுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று ஐ.நா முன்றலில் எழுச்சியுடன் திரண்டு போராட் டம் நடத்தினார்கள் தமிழர்கள். நேற்று உள்ளூர் நேரப்படி பி.ப. 2.30 மணியளவில் ஜெனிவா ரயில் நிலையத்தில் இருந்து தமிழர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமானது. அவர்கள் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகச் சென்று ஐ.நா. முற்றலை அடைந்தனர். அங்கு முருகதாஸன் திடலில் எதிர்ப்புக் கூட்டம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமானது. மாலை 6 மணிவரை இந்தக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் நோர்வேயிலிருந்து ஆரம்பித்த நடை பயணமும் நேற்றைய தினம் ஜெனிவாவை சென்றடைந்தது.அந்த நடைபயணத்துடன் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வரை நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இலங்கையில் இனப்படு கொலைக்குக் காரணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்யவேண் டும் என்றும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் வலியுறுத்திக் கோசம் எழுப்பப்பட்டது. அலையெனத் திரண்ட தமிழர்களால் ஜெனிவாவில் நடத் தப்பட்ட மாபெரும் போராட்டம் அங்கிருந்த எல்லோரது கவ னத்தையும் ஈர்த்தது.
















