மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான MH370 விமானம் 239 பயணிகளுடன் மாயமான சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் பயணி ஒருவரின் கைத்தொலைபேசி இயக்க நிலையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கிப் புறப்பட்ட விமானம் கடந்த சனிக்கிழமை முதல் மாயமாகியுள்ளது. இந்த விமானத்தை தேடும் பணிகள் வியட்நாம் கடற்பரப்பில் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் அந்நாட்டை அண்டிய தீவுப்பகுதிகளிலும் தேடல்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரின் உறவினரால் அந்நபருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது இயக்க நிலையில் இருந்ததாகவும் யாரும் அந்த அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றும் சீன இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காணாமல்போன MH370 விமானத்தின் எச்சங்கள் வியட்நாம் கடலை அண்டிய தீவுப்பகுதியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன எனினும் அதனை மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்திருந்தது.
அதேபோன்று குறித்த விமானத்தின் எண்ணெய்க் கசிவு தென் சீனக் கடலில் காணப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியது. அதனையும் மலேசிய எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்தது.
மலேசியா முதல் சீனா வரையான வான்மார்க்கத்தையொட்டிய கடற்பரப்பில் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய பயணிகளுக்கு 72 மணித்தியாலங்களுக்குள் இடைத்தரிப்பு வசதியை வழங்கியிருந்த சீனா, அதற்காக வீசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தது.
இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்ட கடத்தல்காரர்கள் விமானத்துக்குள் நுழைந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
காணாமல் போன விமானத்தில் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இருவர் பயணித்துள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
இவ்விடயங்கள் MH370 விமானம் குறித்து பல வகையில் சிந்திக்க வைக்கின்றன.
காணாமல்போன விமானத்தில் பயணம் செய்தோர் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடைய உறவினர்கள் கண்ணீருடன் பிரர்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்துடன் உலக நாடுகள் பலவற்றில் அவர்களுக்கான பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
















