உக்ரைன் பிரிவதைத் தடுக்கப் பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன

ugrain
வரும் ஞாயிற்றுக்கிழமை கருங்கடலில் அமைந்துள்ள அழகிய கிறிம் குடாநாட்டில் இடம்பெற இருக்கும் பொதுஜன வாக்கெடுப்பின் முடிவில், கிறிம் மீண்டும் ரஷ்யாவுடன் இணையும் சாத்தியக்கூறு அதிகமாகக் காணப்படும் நிலையிலும் உக்ரைன் பிரிவதைத் தடுக்கப் பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன. உக்ரைன் பிரச்சனையைத் தீர்க்க வல்ல அரசியற் தந்திர வழிகளைக் காணும் முகமாக அங்கலா மேர்க்கலும், டேவிட் கமரோனும் இணந்து பூட்டீனோடு நடாத்திய தொலை பேசி உரையாடல், எதிர்பார்த்த விளைவுகள் எதனையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உக்ரைன் பிரச்சனையில், அரசியற் தீர்வைக்காண எடுத்த முயற்சிகள் யாவும் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், அமெரிக்கா தன் போர்க்கப்பல் ஒன்றை கருங்கடலை நோக்கி அனுப்பி வைத்துள்ளதோடு, பன்னிரண்டு F 16 ரகப் போர் விமானங்களை போலன் நாட்டில் நிலை கொள்ளச் செய்துள்ளது. போலன் நாட்டுப் பாதுகாப்புப் படையினரிடம் நாற்பத்தெட்டு F 16 ரகப் போர் விமானங்கள் ஏற்கனவே உண்டென்பதும், அமெரிக்கா முன்னூறு போர் வீரர்களை போலனிற்கு அனுப்பியுள்ளமையும் தெரிய வருகிறது.

அமெரிக்கா ஆறு F 15 ரகப் போர் விமானங்களை பால்ற்ரிகம் நாடுகளில் ஒன்றான லிற்றவுனிற்கும் அனுப்பிவைத்து உள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர் குறிப்பிடுகிறார். இதே வேளை 16.000 படையினருக்கு மேல் கிறிமில் நிலை கொண்டிருக்கும் ரஷ்ய ராணுவத்தினருக்குத் தேவையேற்படின் பலப் படுத்தும் நோக்கத்தோடு, ரஷ்யக் கிறிம் எல்லைப் புறங்களில் 20,000 படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கிறிம் குடாநாட்டில் மட்டுமல்லாது உக்ரைனின் மற்றைய பகுதிகளிலும் ரஷ்யா சார்பான அரசியற் போக்கும், ரஷ்யாவிற்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் பிரச்சனையின் தீர்வுக்கான கடிவாளம் பூட்டீன் கைகளில் இருப்பதனைப் பத்திரிகைகள் தெளிவாக அறிவுறுத்தி வரும் வேளை, பூட்டீனின் நெருங்கிய குடும்ப நண்பரும், ஜேர்மன் நாட்டின் முன்னைய முதன் மந்திரியுமான கெ(h)கார்ட் ஷ்றொடர், இப்பிரச்சனையின் மூலகாரணம் ஐரோப்பிய ஒன்றியம்மெனக் குற்றஞ்சாட்டுகிறார்.

மாறுபட்ட கலாச்சாரப் பண்பாடுகளையும், மொழியையும் கொண்ட உக்ரைன் பிரச்சனையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பத்திலிருந்து கையாண்ட வழிமுறைகள் மிகவும் தவறென்றும், பூட்டீன் மேல் தன்னால் முழுமையாகக் குறை கூறமுடியாதெனவும் எடுத்துக் கூறியுள்ளார். உக்ரைனின் ஆட்சி வரம்புக்குள் பூட்டீனின் ராணுவப் பிரவேசம் தவறென்பதனை ஒப்புக் கொள்வதாகக் கூறும் முன்னாள் முதல் மந்திரி, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் வியாபார ஒப்பந்தத்தில் இணையும்படி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த நிலையிலிருந்து, புரட்சிக் காலம் வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியற் தவறு, இன்று உக்ரைன் பிரிவதற்கான காரணங்களில் ஒன்றெனச் சுட்டிக்காட்டினார்.

இறுதியாகக் கிடைத்த தகவலின்படி, ஜேர்மன் நாட்டிலிருந்தும் இங்கிலாந்திலுள்ள வடிஸ்ரன் விமானத் தளத்திலிருந்தும், ரஷ்யப் போர் வீரர்களினதும் அவர்களது ராணுவ உபகரணங்களினதும் சகல செய்கைகளையும் உளவு பார்க்கும் விமானங்கள் றுமேனியா, போலன் நாடுகள் நோக்கி அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Tags: , , ,

Leave a Reply