இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று உண்மையில் விரும்புவர்கள் அதற்கு உதவிபுரியும் விடயங்களை மேம்போக்காகக் கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முப்பது வருடகால ஆயுதப் போரைத் தவறானதாக முத்திரை குத்தி முடிவுக்குக் கொண்டு வந்தமை சிலரின் அணுகுமுறை. ஆயுதப் போரை மூர்க்கத்தனமாக முடிவுக்குக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள தமிழரின் கையறுநிலையைப் பயன்படுத்தி இன கலாசார சமய அழிப்பை ஏற்படுத்தி அடித்து அமர்த்துவதனூடாக எதிர்ப்பு நிலைக்கு முடிவுகட்டலாம் என்ற பொறிமுறையில் நடவடிக்கைகள் நகர்த்தப்படுகின்றன.
தமிழர்கள் வந்தேறுகுடிகள் அவர்கள் வெறுமனே வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்ற நிலைப்பாட்டாளர்கள் அரசியலுக்குள் அடியெடுத்துள்ளனர். ஆயுதப்போரின் முடிவில் ஒருநாடு ஒரு தேசம் என்ற பிரகடனம் வலிந்து முன்வைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டமூலம் தம்மீது வலிந்து திணிக்கப்பட்டதேயன்றி தமக்கு அதை நடைமுறைப்படுத்தும் உடன்பாடில்லை என்ற செய்தியையே அனைத்து சிங்கள தலைமைகளும் வெளிப்படுத்துகின்றன.
தமிழர்பக்க ஆயுத எதிர்ப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் சிறிலங்கா இராணுவம் தனது நிலைப்பாடு சார்ந்த செயற்பாடுகளைத் திட்டமிட்ட அதிக வினைத்திறனுடன் முன்னெடுத்து வருகின்றது. அனைத்து வகையான அத்துமீறல்களும் சத்தம் சந்தடி இல்லாத வகையில் இடம்பெற்று வருகின்றன.
நசுக்கப்பட்ட நிலையில் தேசிய மட்ட மனித உரிமை அமைப்புகள் மெளனம் காத்து அனுசரணையாளராக, ஒத்துழைப்பாளராக செயற்படுகின்றன. ஆயுத மோதல் முடிவுக்கு வந்தது அமைதி நிலையை ஏற்படுத்தி விடவில்லை. மாறாக அமைதியான முறையில் இனஅழிப்பு நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்ட வகையில் வேகத்துடன் தொடர்ந்து செல்வதற்கு சந்தர்ப்பம் வகுத்துள்ளது. தமிழர் தரப்பு ஆயுத பாதுகாப்பை அழித்தொழிப்பதில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துச் சக்திகளும் இதைக் கவனத்திலெடுக்க வேண்டும்.
போர் முடிவுக்கு வந்ததன் பின்னராவது சிங்களத் தலைமைகளிடம் இன நல்லிணக்கம் சார்ந்த திசையில் மனமாற்றம் நிகழவில்லை என்பதையே மேற்கூறிய சூழ்நிலைகள் காட்டுகின்றன. தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இன எதிர் உணர்வுகள் தற்போது வலுப்பெற்று மேலோங்கி வருவதையே தென்னிலங்கை செயற்பாடுகளும் காட்டுகின்றன.
இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்துடையது என்ற உணர்வே சிங்கள இனத்தினுள் ஆழ வேரூன்றி உள்ளது.
இதன் விளைவாகவே கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, மலையகத் தமிழர்களின் நாட்டு நிலைமை (பிரஜாவுரிமை) மறுக்கப்பட்டமை பின்னர் 1958, 1977, 1981, 1983 களில் இன வன்முறைகள் என்பன ஏற்பட்டன.
இலங்கை வாழ் அனைத்து இனத்தவர்களுடனும் குரோத மனப்பான்மையையே சிங்களவர்கள் கொண்டுள்ளனர் என்பதை இவை நிரூபிக்கின்றன. சிங்கள இனத்தவர்க்கே இன நல்லிணக்க உணர்வு வளர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. சர்வதேசம் இதைக் கண்டு கொள்ள வேண்டும்.
இலங்கையில் இன நல்லிணக்கங்களுக் கூடான அமைதித் தீர்வை எட்டும் உணர்வு, தகைமை என்பன சிங்களவர்களிடம் இல்லை என்பதையே காட்டுகின்றது. வற்புறுத்தல்கள் அழுத்தங்களுக்கூடான தீர்வுத் திட்டங்கள் காலவோட்டத்தில் தூக்கி எறியப்படும் என்பதையே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் தற்போதைய நிலை காட்டுகின்றது. சிங்களத் தலைவர்கள் தாமாக செய்துகொண்ட தமிழ்-சிங்கள ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளும் சிங்களவர்களின் மனமின்மையைக் காட்டுகின்றன. சிங்களவர்களினால் ஒரு நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக மாற்றமடையாது காணப்படும் இந்த மன நிலைப்பாடு மாற்றமடையும் சாத்தியங்கள் காணப்படவில்லை.
மேலும் சிங்கள மக்களிடையே இன முரண்பாட்டு உணர்வு வலிமை பெற்று உக்கிரமடைவதையே நிகழ்கால சம்பவங்கள் காட்டுகின்றன.
போர்க்குற்ற சர்வதேச விசாரணை யிலிருந்து தப்புவதற்காக அரசியல் தீர்வுக்கு முன்வரும் செயற்பாடு காட் சிப்படுத்தப்படலாம். பின்னர் போர்க் குற்ற சர்வதேச விசாரணை ஆபத்து அகன்றதும் அரசியல் தீர்வு முயற்சி கைவிடப்படலாம், எட்டப்பட்ட தீர்வுகள் கிழித்தெறியப்ப டலாம். அல்லது எரியூட்டப்படலாம். கடந்த கால வரலாற்று சம்பவங்களும், சிங்களவர்களின் நிகழ்கால மனநிலையும் இதையே உறுதி செய்கின்றன.
போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுவதனூடாக புதிய சமநிலை தோற்றுவிக்கப்படும். தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இன கலாசார அழிப்புகள் கட்டுப்படுத்தப்படலாம். நீதி கிடைக்கப்படும் என்ற மன உணர்வு இலங்கை வாழ் தமிழர்களிடையே ஏற்படும். இது வன்முறையற்ற பாதையூடாக தீர்வை நோக்கி பயணிக்கும் மனப்பாங்கை இலங்கை தமிழர்களிடையே ஏற்படுத்தும்.
இதே வகையில் சக இனங்களின் அரசியல் உரிமையை ஒரு நூற்றாண்டு காலமாக மறுத்து வருபவர்களிடமே அரசியல் தீர்வை எட்டும் பொறுப்பு கையளிக்கப்படுவது அர்த்தமற்ற முடிவாக அமையும். சுதந்திரமான தமிழின அழிப்புக்கு மேலும் சில காலத்தை வழங்குவதாகவே இவை அமையும்.
இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதும், கட்டாயப்படுத்தப்படும் இராணுவ சேர்ப்பு போன்ற அத்துமீறல்கள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதான செய்திகளும் தீர்வின்றியே காலம் இழுத்தடிக்கப்படுவதும் தமிழ் இனத்தை விரக்தியின் விளிம்புக்கு இட்டுச் செல்கின்றது. ஓர் இனம் விரக்தியின் விளிம்பை அடைந்து விட்டால் விளைவு சந்தோசமாக அமை யாது. காலம் தாழ்த்தாது நீதி வழங்கப்படுவதும், தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு, விரைந்து இறுதியான அரசியல் தீர்வை எட்டுவதுமே சமாதான சூழலை ஏற்படுத்தும்
















