நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 115 பேரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 42 பேர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும் அவர்களில் ஒருவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை. அதனடிப்படையில் 41 இந்தியமீனவர்களே இன்று மன்றுக்கு கொண்டுவரப்பட்டனர். விசாரணையை மேற்கொண்ட நீதவான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து குறித்த 41பேரையும் விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதால் அவர்களை விடுவிப்பதாக இன்று காலை தீர்ப்பளித்தார்.
மேலும் இன்று மன்றுக்கு சமூகம் தராதவரை எதிர்வரும் 17 ஆம் திகதி மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 64 இந்திய மீனவர்களையும் அவர்களது 27 படகுகளையும் இன்று பிற்பகல் நீதவான் முன்னிலையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் இன்னும் 32 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















