தேசத்துரோக குற்றமிழைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கிழக்கில் பெளத்த அடிப்படை வாதம் அல்ல முஸ்லிம் அடிப்படைவாதமே இயங்குகின்றதென்றும் அக்கட்சி தெரிவித்தது.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க இங்கு உரையாற்றுகையில்,
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கையளித்த அறிக்கையில் இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் தமது முஸ்லிம் பள்ளிவாசல்களை இடிப்பதாகவும் முஸ்லிம்களை அடக்கு முறைக்குள்ளாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதோடு இதன் பின்னணியில் பெளத்த அடிப்படைவாத சக்திகளான சிங்கள ராவய பொதுபலசேனா ஹெல உறுமய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வறிக்கையை அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக கையளிக்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள நீதியமைச்சராகவே நவிப்பிள்ளையிடம் இவ் அறிக்கையை கையளித்துள்ளார்.
இது தேசத்துரோகச் செயலாகும். எனவே அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்றும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு மாகாண தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றார். இதன் மூலம் தமது பிரிவினைவாதத்தை வெளிப்படுத்துகிறார்.
















