அமெரிக்கா உலக அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் செய்கையை உடன் நிறுத்த வேண்டும்

iphone-coverஅமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலகம், உலக அரசியல் விவகாரங்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணிப்பதற்காக, அரசியல் வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் செய்கையை உடன் நிறுத்துவதற்கான வழி வகைகளை அமெரிக்கா ஆரம்பிக்காத பட்சத்தில், ஐரோப்பிய அமெரிக்க சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்த ஏற்பாடுகள் கைவிடப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பியப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் 78 எதிர்ப்பு வாக்குகளுக்கு மத்தியில் 544 விருப்பு வாக்குகளைப் பெற்று, இத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலகம் நீண்ட காலமாக ஐரோப்பிய மக்களை சகல வழிகளிலும் வேவு பார்த்து வருவதாக ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.
உலக மக்கள், இணையத் தளங்களிலும் அதற்கு வெளியான மற்றைய சகல தளங்களிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இயங்கவும், தனிப்பட்ட எவரினதும் சொந்த விபரங்கள் திருடப்படாமலும் இருக்கக் கூடிய வகையில் தாம் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஒரே குரலில் கருத்துத் தெரிவித்துள்ளனர். வாக்கெடுப்பின் போது ஒரு சில முன்வரிசைப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஸ்னோடென் முகமூடிகளை அணிந்திருந்தமை குறிப்பிட்த்தக்கது.

இப்படியான விடயங்களை முடிவிற்குக் கொண்டுவர உழைக்கும் (Whistle blower) எட்வேட் ஸ்னோடென் போன்றவர்களைப் பாதுகாக்கும் சட்ட அமைப்பை ஐரோப்பா கொண்டுவர வேண்டுமெனவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஏற்பாடுகளும் யாவும் வருகின்ற வருடம் வரை ஒத்தி வைக்கப்படலாமென ஸ்றாஸ்பேர்க் அரசியல் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: , , ,

Leave a Reply