ஐநாவின் ஐ.நா மனிதஉரிமை அவையில் அனந்தி சசிதரனின் இரண்டு உரைகள் சர்வதேச பிரதிநிதிகளின் மனதை தொட்டன

Ananthy-Sasitharan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாணசபையின் உறுப்பினர் ஆனந்த சசிதரன் தெரிவித்துள்ளார்,

ஜெனீவாவில் நடைபெற்று வரும் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச தீர்மானத்தில் சில முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஆனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஓர் உரைக்கு 2 நிமிடங்களே வழங்கப்படும் நிலையில், தனது முதலாவது உரையில் சிறுவர் தொடர்பான விடயங்களை அனந்தி சசிதரன் ஐ.நா மனித உரிமை அவையில் ஆங்கில மொழியில் முன்வைத்தார்.

பலரும் அதிசயிக்கும் வகையில் ஒரு சில நிமிடங்களில் வேறொரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயரில் தனது இரண்டாது உரையையும் ஒரே நாளில் அனந்தி முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை அமைதியாக இருந்து தனது உரையை அவர் முன்வைத்தமையால் சிறிலங்கா அரசால் அதைக் குழப்பமுடியாது போயிற்று.

ஒரே நாளில் இரண்டு உரைகளை தனக்கெட்டிய ஆங்கில அறிவுடன துணிகரமாகவும் கச்சிதமாகவும் அவர் முன்வைத்திருந்தமை சபையில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் மனதையும் தொட்டிருந்தது.

தனது இரண்டாவது உரையில் இன அழிப்புக்கான நியாயம் கோரும் சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை கோரினார்.

இன அழிப்பில் தான் ஈடுபட்டிருக்கவில்லை என்று மறுதலிக்கும் சிறிலங்கா அரசை சுயாதீனமான நம்பகமான விசாரணையை எவ்வாறு முன்னெடுக்குமாறு வேண்டுவது எவ்வகையில் நியாயமாகும் என்ற கேள்வியை எழுப்பினார்.

மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் சிறிலங்காவிடம் இவ்வாறான ஒரு விசாரணையை முன்னெடுப்பதற்கான அரசியல் விருப்பு இல்லாதிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அனந்தி, இருப்பினும் நவநீதம்பிள்ளை இன அழிப்பு என்ற குற்றத்துக்கான விசாரணையைக் கோராதுவிட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகத் தனது உரையில் குறிப்பிட்டுச் சொன்னார்.

இன அழிப்புப் போரின் பின்னர் ஒரு கட்டமைப்பு இன அழிப்பை சிறிலங்கா அரசு முன்னெடுத்துவருவதாகக் குற்றம் சுமத்திய அனந்தி, தொடருகிற இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்றை சர்வதேச சமுகம் உருவாக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானங்களாயினும் சரி, இவ்வருடம் முன்மொழியப்படவிருக்கும் நகலாயினும் சரி, ஈழத்தமிழ் மக்களின் பிரதான சிக்கல்களுக்கான பொருத்தமான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று அனந்தி உரைத்தார்.

60 வருட காலம் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் இன அழிப்பு தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை அவர் கோரினார்.

சிறுவர் எதிர்நோக்கும் இன அழிப்பு தொடர்பான முதலாவது உரையின் விபரம்

எந்தப் போரிலும் பாதிக்கப்படுகிற சிறுவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முழு வாழ்க்கைக் காலத்தையும் செலவு செய்யவேண்டிவரும். ஆனால், ஈழத் தமிழச் சிறார்களோ ஓர் இன அழிப்பு நோக்கத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும் போருக்கே முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.

இன்று நான் ஒரு அரச சார்பற்ற பிரதிநிதியாக மட்டுமல்ல, தங்கள் தந்தையை இன்னும் தேடிக்கொண்டிருக்கும் மூன்று பெண் பிள்ளைகளின் தாயாகவும் இங்கு நிற்கிறேன். எனது கணவர் எழிலன் ஓர் அரசியல் தலைவர். அவர் போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்திடம் எங்கள் கண்களுக்கு முன்னால் சரணடைந்தார்.

ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. சிறிலங்கா அரசாங்கம் எமது கேள்விகளுக்கு இதுவரை பதில் தரவில்லை. எனது பிள்ளைகளைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இன்று இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது கூட 13 வயதுச் சிறுமியான விபூசிகா பாலேந்திரனை சிறிலங்கா இராணுவம் கைதுசெய்திருக்கிறது. இந்தச் சிறுமி தனது சகோதரனைத் தேடி காணாமற்போனோர் தொடர்பான போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் வருகை தந்து அழுதபடியே கேள்வியெழுப்பும் ஒரு பிள்ளை. இந்தச் சிறுமியின் கைது அநீதிக்கெதிராக குரலெழுப்பும் ஒவ்வொரு பிள்ளைக்கும் எதிரான அநீதியாகும்

ஆக்கிரமிப்பு இராணுவம் ஆயுதங்களை ஏந்தி எமது சிவில் வாழ்வில் சகல பக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினன் என்ற வகையில் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளது. எமது வீடுகளையும் பாடசாலைகளையும் இராணுவம் சூழ்ந்திருக்கிறது.

பெண்கள் மீதும் சிறுவர் மீதும் பாலியில் வன்முறை புரிவதாக இராணுவம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சிறுவர் கட்டாய வேலைக்கு உட்படும் நிலை காணப்படுகிறது. இராணுவத்தினர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கவும் நியமிக்கப்படும் நிலையும் காணப்படுகிறது என்று மனித உரிமைச் சபைக்கு அனந்தி சுட்டிக்காட்டினார்.

எமது பிள்ளைகளின் உலகைப் பொறுத்தவரை இன்னமும் ஆயுதப் போரை ஒத்த சூழலிலேயே அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்றும் அனந்தி குறிப்பிட்டுச் சொன்னார்.

நிரந்தரமான இன அழிப்புக்கு எமது சிறுவர் பலியாகிவிடும் நிலை ஏற்பட முதல் காத்திரமான நடவடிக்கையை அவர் கோரினார்.

எமது பிள்ளைகள் ஒரு தொலைந்த தலைமுறையாகுவதை நாம் அனுமதிக்கமுடியாது என்றும் மனித உரிமைச் சபைக்கு அனந்தி தனது உரையில் தெரிவித்தார்

Tags: , , ,

Leave a Reply