தமிழ்ல எனக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை ‘தலைவா’ மட்டும் தான். அந்த வார்த்தைக்கு தகுதியான சூப்பர் ஸ்டாருக்காகத்தான் கோச்சடையான் விழாவுக்கு வந்தேன் என்று உணர்ச்சிவசப்பட்டார் நடிகர் ஷாருக்கான்.
‘கோச்சடையான்’ ஆடியோ பங்ஷனில் கலந்து கொள்வதற்காகவே மெனக்கிட்டு சென்னை வந்து போனார் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான். விழாவில் நீண்டநேரம் ஜாலியாகப் பேசினார். அப்போது அவர் “25 வருடங்களுக்கு முன்பு ஒரு ஹிந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன் முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.
ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்த மற்ற நடிகர் நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். 3 மணி ஆன பிறகும் கூட ரஜினி அந்த பிராக்டிஸ்சை விடாமல் செய்து கொண்டிருந்தார். வெற்றிபெற கடின உழைப்பு தேவை என்பதை ரஜினியைப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன்.
நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் படங்களை அந்த அளவுக்கு ரசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார். தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை தலைவா. அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இன்று நான் சென்னை வந்திருக்கிறேன். தமிழ்படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன.
இந்த விழாவுக்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களுடன் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இங்கு வந்தால் எனது சொந்த வீட்டுக்கு வந்த மாதிரிதான் இருக்கிறது,” என்றார் ஷாருக்.

















