கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தை அடுத்துக் கைது செய்யப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி விபூசிகா, இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சிறுவர் இல்லம் ஒன்றுக்குப் பாரப்படுத்தப்படுவார் என்று கூறப்படுகின்றது.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் ஒருவர் காயமடைந்ததார். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஜெயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவானின் வீட்டில் முற்படுத்திய சமயம், ஜெயகுமாரியை பூஸாவில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்த பதில் நீதிவான், 13 வயதான விபூசிகாவை வைத்தியப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்றைய தினம் சிறுமி விபூசிகா முற்படுத்தப்பட்டு, பாதுகாப்பான சிறுவர் இல்லம் ஒன்றுக்குப் பாரப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
















