இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக் கையளிக்க முடியாது. அது எமது அரசமைப்புக்கு முரணானது. பிரேரணை நிறைவேறினாலும் – சர்வதேசத்தின் அழுத்தம் தொடர்ந்தாலும் எவருக்கும் இலங்கை அஞ்சாது- என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அரசின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற போதிலும், அவை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. அதனால் பிரேரணையை நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை யகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“”ஐ.நாவில் இடம்பெற்ற சர்வ தேசநாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் பல வெளி நாட்டுப் பிரதிநிதிகளுடன் நான் முக்கிய பேச்சில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் “இலங்கையுடன் நாம் சுமுகமான நட்புறவைப் பேணுகின்றோம்.
30 வருடகால போரின் பின்னர் கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நாம் வரவேற்கின்றோம். உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை ஒரு சிறப்பான நிலையில் உள்ளது. இருப்பினும் அமெரிக்காவால் முன்வைக்கப்படும் பிரேரணை நாம் எவ்வாறு நிராகரிப்பது? அமெரிக்கா எமக்கு முக் கியத்துவமான நாடு. அது கொண்டு வரும் பிரேரணையை எம்மால் நிராகரிக்க முடியாது’ என்று தெரிவித்தன.
இந்த நாடுகள், அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு பிரச்சினை ஏற்படும்போது, அவற்றுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான கடப்பாடு அமெரிக்காவுக்கு இருக்கின்றது. அதனால் அமெரிக்கப் பிரேரணையை நிராகரிக்க முடியாத நிலையில் அந்த நாடுகள் இருக்கின்றன.
இந்த நாடுகள் உட்பட இன்னும் பல நாடுகள், அமெரிக்காவிடமிருந்து பொருளாதார மற்றும் நிதியுதவிகளைப் பெறுகின்றன. அதனால் அந்த நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளன.
எவருக்கும் அஞ்சமாட்டோம்
இலங்கையில் இன்னுமொரு அரசை நிறுவுவதற்கான நடவடிக்கையே ஜெனிவாவில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரேரணையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய இலங்கை அரசின் செயற்பாடுகளை வெளிநாட்டுக்கு கையளிக்க வேண்டும். இது எமது அரசமைப்புக்கு முரணானது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இறைமையுள்ள அரசின் உரிமையை வெளிநாட்டுக்கு வழங்க முடியாது.
எவர் எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், நாம் அஞ்சமாட்டோம். அரசு என்ற வகையில் எமது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.
எமது நடவடிக்கைகளை நாம் சிறப்பாக முன்னெடுப்பதற்கு மக்கள் எமக்கு உறுதுணையாக இருக்கின்றனர். நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென்மாகாணசபைத் மக்கள் அரசுக்கு வாக்களித்து அதிசிறந்த வெற்றியைப் பதிவுசெய்து, மக்கள் எப்போதும் அரசுடனே இருக்கின்றனர் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

















