வன்னியினில் படைத்தரப்பின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் பல பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடையார்கட்டிற்கு மேலாக உள்ள சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இன்று அதிகாலை முதல் படையினரின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகியிருந்தது. இளம்வயதினை உடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பால் வேறுபாடின்றி படையினரால் பிடித்துச்செல்லப்பட்டு பொது விளையாட்டரங்கொன்றில் வைத்து அங்கு அவர்கள் அடையாளப் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு சென்றிருந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஆட்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 பேர் வரையிலானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்தக்கூடியதான தகவல்கள் ஏதுமில்லை.
இதனிடையே முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இன்று காலை முதல் முன்னாள் போராளிகளை அவ்வப்பகுதி படைமுகாம்களிற்கு வருமாறு படையினர் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் அச்சம் காரணமாக கணிசமான போராளிகள் முகாம்களிற்கு சென்றிருக்கவில்லை. இந்த நிலையில் தப்பியோடிய நபர்கள் தொடர்பாகவும் புலிகள் தமது அமைப்பினை மீளக்கட்டியெழுப்ப முற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஒத்துழைக்க கூடாதென தம்மை படை அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள், ஏற்கனவே படையினரது கண்காணிப்பு வளையத்தினுள் இருந்த தாம் தற்போது மோசமான நெருக்குவாரங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழலை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நேற்று கிளிநொச்சியினை அண்டிய கரையோர பகுதிகள் சுற்றிவளைப்பு தேடுதல்களிற்கு உள்ளாகியிருந்த நிலையினில் இரண்டாவது நாளாக இன்று உடையார்கட்டிற்கு மேலாக உள்ள சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு பகுதிகள் தேடுதலிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும.
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுடன் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார் முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளரும், தற்போதைய கிளிநொச்சி படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுகந்த ரனசிங்க
அன்மையில் தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து வன்னியில் படையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது பிரதேச ரீதியாக தடுப்பிலிருந்து விடுதலையாகி வந்துள்ள முன்னாள் போராளிகளை சந்தித்து அவர்களை பணத்திற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் எனவும் நாட்டிற்கு ஏதிராக தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளரும்,தற்போதைய கிளிநொச்சி படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுகந்த ரனசிங்க அவர்கள் முன்னாள் போராளிகளின் சந்திப்பில் தெரிவித்து வருகின்றார்.
சிலர் வெளிநாடுகளிலிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு இங்குள்ள இயல்புச் சூழலை குழப்பும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளவதாகவும் அவ்வாறானவர்கள் இனம்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முதல் கிளிநொச்சியில் பிரதேச ரீதியாக முன்னாள் போராளிகளுடன் படையினரின் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறுது.

















