இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதில்லை என்று இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்தவாரம் நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வந்திருந்த இந்திய மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மீனவசங்க தவைர் எஸ். எமரிட் மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்தின் ராமநாதபுரம் மீன்பிடி சங்கத் தவைர் சுடலைக்காசி ஆகியோர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது,
“1974ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இலங்கைக்கு சொந்தமான பகுதிகளில் மீன் பிடிக்கின்றோம். அப்போதெல்லாம் எமக்கு எந்தப் பாதிப்பும் வந்ததில்லை. 1983ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் எமக்கு இழப்புக்கள் அதிகம்.
எம்மை நோக்கிச் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு “விடுதலைப் புலிகள் என்று நினைத்தே சுட்டோம்’ என்று இலங்கைக் கடற்படையினர் கூறுவார்கள்.
இப்போதும் எம் மீதான கெடுபிடிகள் தொடர்கின்றன. இப்போது என்ன காரணம் சொல்லப் போகிறார்கள்?
இலங்கை மீனவர்கள் இந்தியாவால் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் மனிதா பிமானதுடனேயே நடத்தப்படுகின்றனர். ஆனால் இலங்கையை பொறுத்தவரை மனிதாபிமானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நாங்கள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது நாம் அறியாமல் செய்வதல்ல. எமக்கு அது தெரியும். இருந்தாலும் நாம் மீன்பிடித்தலை நம்பியே வாழ்கின்றவர்கள். அதனால்தான் வருகின்றோம். பேச்சு நடந்தால் நல்லதொரு தீர்வு அமையும்” என்று தெரிவித்தனர்.
அதேவேளை, ராமேஸ்வரம் வேற்காடு மீனவசங்க உறுப் பினரான சந்தியாலியோன் என்பவர் கூறுகையில், “கச்சதீவுக்கு திருவிழாவில் பங்கேற்பது, வலைகளை இப்பகுதியில் காயப்போடுவது, இந்தப் பகுதியை சுற்றி மீன் பிடிப்பதென்ற மூன்று விடயங்களில், திருவிழாவிற்கு வருவ தென்பது மட்டுமே தற்போது எமக்கு சாத்தியமானதாக உள்ளது. ஏனைய இரண்டு விடயங்களும் எமக்குக் கிட்டவில்லை.
பேச்சு மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.

















