“அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது” – விக்கி:-
‘வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனீவாவில் காட்டுவதற்காகவே இப்போது புலி நாடகங்கள் அரகேற்றப்படுகின்றன’
வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனீவாவில் காட்டுவதற்காகவே இப்போது இங்கு புலி நாடகங்கள் அரகேற்றப்படுகின்றன என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மன்னாரில் இடம்பெற்ற சத்தியாக்கிரகத்திற்கு தாம் அனுப்பி வைத்த செய்தியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டவை வருமாறு:-
அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் என்னிடம் வந்து விடுதலைப் புலிகள் மீண்டும் வடக்கில் மீள் இணைகின்றார்கள்; இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை என்றார். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்றார். படம் போட்டு எவ்வாறு மீள் இணைப்பு நடைபெற்றிருக்கின்றது என்று தாங்கள் நம்புகின்றார்கள் எடுத்துக் காட்டினார்.
இதை ஏன் உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. பழைய நாட்களை எமக்குணர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. ஆகவே அன்று நடந்தவற்றை என்றும் நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட இருக்கின்றன. அவற்றுக்கு எதிராகத்தான் இந்த உண்ணாவிரதமும் பிரார்த்தனையும் இடம்பெறுகின்றன. சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28 ஆம் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனீவாவிலும் கூறப்பட்டு வருகின்றன.
நான் இராணுவத் தளபதியிடம் கேட்டேன் – ‘ஜெயக்குமாரி வீட்டினுள் இருந்து யாரோ ஒருவர் வந்த வேளையில் இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லையா?’ என்று. தூரத்தில் இருந்தார்கள் என்றார். இராணுவத்தினர் அங்கு இருக்கும் போதே சுட்டுவிட்டுத் தப்பிப் போய்விட்டார் என்றால் அதை ஏற்பது சற்றுக் கடினமாக இருக்கின்றது என்றேன். அவர் பதில் கூறவில்லை. வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு.
நாங்கள் எந்த விதத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால் இங்கு போர்க்கால முடிவில் நடைபெற்றவை சம்பந்தமான ஆய்வு நடைபெற இடமளிக்கப்படவில்லை; நடப்பவை சம்பந்தமாக அரசாங்கம் ஆற அமரச் சிந்தித்துப் பார்க்கவில்லை; அத்துடன் எதேச்சாதிகாரமாக இங்கு நடக்கப் போகின்றவற்றிற்கு இன்று இடப்படும் அடித்தளத்தை ஆராய எமக்கு அனுசரணைகள் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை.
மனித உரிமையாளர்கள் ருக்கி பெர்ணாண்டோ, அருட்தந்தை பீரவீன் மகேசன் ஆகியோர் அநியாயமாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி கூட ஒருநாள் வழக்கேதுமின்றி விடுதலைப்பட வேண்டியவரே. ஆனால் அதுவரையில் அவர் அனுபவிக்கப்போகும் நரக வேதனைகள், அவரின் மகள் அனுபவிக்கப்போகும் அவலங்கள் ஆகியனவற்றிற்கு யார் பதில் சொல்லப் போகின்றார்கள்? ஜெனீவாவில் கதை அளக்க இவர்கள்தான் கிடைத்தார்களா? அரசாங்கமும், இராணுவமும் ‘புலி வந்துள்ளது, புலி வந்துள்ளது!’ என்று ஜெனீவாவில் கூக்குரல் இட இவர்கள்தான் பலிக்கடாக்களாகக் கிடைத்தார்களா?
இராணுவத்தை வெளியேறச் சொன்னால் இதே புலிக்கதை கூறி எமக்கு இராணுவத்தின் பாதுகாப்புத் தேவை என்கின்றார்கள் அரசாங்கமும், இராணுவமும். வேண்டுமானால் சிவில் பொலிஸ் படையை விருத்தி செய்யுங்கள். கூடிய தமிழ்ப் பேசும் பொலிஸ்காரர்களை பொலிஸ் பதவிகளில் நிறுத்துங்கள். அதை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து அவர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
















