“முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்து வந்திருந்த இராணுவத்தினரே எனது சகோதரர்களைக் கொண்டு சென்றனர். அவர்களை விட்டுவிடுமாறு நாங்கள் அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினோம்.
அதைப் பொருட்படுத்தாது எனது சகோதரர்களை அவர்கள் கொண்டு சென்றனர். 24 ஆண்டுகள் கழிந்துள்ள போதும் எனது சகோதரர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் 72 வயதான எனது அம்மா இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றார்”
இவ்வாறு கண்ணீர் விட்டழுத வாறு தெரிவித்தார் ஆசிரியர் ஒருவர். காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் முதல் கிழக்கு மாகாணத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.
இரண்டாம் நாளான நேற்றும் உறவுகளைத் தொலைத்த உறவுகள் ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களைப் பதிவு செய்தனர். அதன்போதே தனது மூன்று சகோதரர்களைத் தொலைத்த ஆசிரியர் ஒருவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
“1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி முருகன் கோயிலில் தங்கியிருந்தோம். அப்போது அது அகதி முகாமாகவே இருந்தது. 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி அதிகளவான இராணுவ வாகனங்களில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் இராணுவத்தினர் வந்து இறங்கினர்.
அவர்கள் தம்முடன் தலையாட்டி ஒருவரையும் அழைத்து வந்திருந்தனர். அந்த தலையாட்டியால் இனங்காட்டப்பட்ட எனது மூத்த சகோதரர் வீரபத்திரர் பொன்னுத்துரை (வயது 30) மற்றும் இளைய சகோதரர்கள் வீரபத்திரர் அருள்நாதன், வீரபத்திரர் சசிதரன் (வயது 16) ஆகியோர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர்.
அவர்களுடன் சேர்த்து அங்கிருந்த பலர் பிடிக்கப்பட்டனர். அவர்களை விட்டுவிடுமாறு நாம் இராணுவத்தினரின் காலில் விழுந்து கெஞ்சினோம். அதனை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் எங்களது உறவுகளைக் கொண்டு சென்றனர்.
இராணுவத்தினரால் எனது சகோதரர்கள் பிடிக்கப்பட்டு 24 வருடங்கள் கடந்து விட்டது.
72 வயதான எனது அம்மா இன்னமும் தனது மூன்று பிள்ளைகளும் வருவார் என்ற எதிர்பார்ப்போடு இருக்கின்றார்” என்று கண்ணீர் விட்டழுதவாறு தெரிவித்தார். ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்த மூன்று தாய்கள், வாகரையில் அமைந்துள்ள இராணுவத்தினரால் தமது பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்பட்டனர் என்று முறையிட்டுள்ளனர்.
“எமது பிள்ளைகளை சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கொண்டு சென்றனர். நாங்கள் இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறையிட்டோம். செஞ்சிலுவைச் சங்கத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்தி, எமது பிள்ளைகளை இராணுவத்தினரே கைது செய்து வைத்துள்ளனர். விசாரணை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் என்று தெரிவித்தனர்.
எமது பிள்ளைகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 20 வருடங்களாகியுள்ள போதும் அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை” என்று அவர்கள் கண்ணீர் மல்க சாட்சிமளித்தனர்.

















