ஏமாற்றங்கள் எதுவரை…?

srilanka-eelamதமக்குச் சொந்தமான நிலங்களை இழந்து இன்னமும் கூட சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு வாழ்ந்துவரும் ஒரு தொகுதி தமிழர்களின் நிலை தொடர்பாகத் தெளிவான திட்டங்கள் எவையும் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை
மாறாக வேளைக்கு வேளை மாறுபட்ட கருத்துக்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மக்களில் பலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அரசுடன் இணைந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும், படைத் தரப்பினரும் வேளைக்கொரு வாக்குறுதியை வழங்கி அவர்களை எரிச்சலடையச் செய்து வருகின்றனர்.

இறுதியாக வளலாய்ப் பகுதியில் இவர்களைக் குடியமர்த்த முடியுமெனப் படைத்தரப்பினர் கூறியதுடன், வலிகாமம் வடக்கில் உள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் அரசுக்கு உரியதெனவும் தெரிவித்துள்ளனர். இன்றுவரை தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியுமென்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்த அப்பகுதியைத் தமது பூர்வீகமாகக் கொண்டிருந்த மக்கள் இந்த அறிவிப்பினால் மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் அடைந்து காணப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் இந்த நிலைதான் காணப்படுகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்கள் தமிழர்களின் பிடியிலிருந்து நழுவிச் செல்கின்றன.

அங்கு பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்க் குடும்பங்களின் சொந்த நிலங்கள் படையினரின் உதவியுடன் பெரும்பான்மையின மக்களின் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் தமது வயல் நிலங்களைக் கூட அண்ட முடியாத நிலையில் எட்ட நின்று பார்த்துப் பெருமூச்சு விடும் நிலையே இன்று காணப்படுகின்றது.

தென்னமரவாடி, மணலாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் உட்பட இன்னும் பல தமிழ்க் கிராமங்களில் இந்த நிலைதான் காணப்படுகின்றது. இங்குள்ள தமிழ் மக்கள் தமது விவசாய முயற்சிகளை மட்டுமல்ல மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் பல்வேறு இடர்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

படையினரின் தலையீடுகள் முழு அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்டுவரும் மக்கள் செய்வதறியாத நிலையில் தமது மனதுக்குள்ளேயே புழுங்கியவாறு வேதனையில் மூழ்கியுள்ளனர்.

வடக்கு மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் எவையும் வழங்கப்படாத நிலையில் இங்கு நடப்பதையயல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவே மாகாணசபை நிர்வாகத்தால் முடிகின்றது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் மக்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் இரகசியமான முறையில் தமிழர்கள் அல்லாதவர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இவை எல்லாம் இந்த நாட்டின் நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கப் போகின்றன என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மாறாகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கிப்படு குழிக்குள் தள்ளி விடும் செயற்பாடுகளே முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இன்று இலங்கைத் தமிழர்களின் நிலை அனலில் இடப்பட்ட புழுவின் நிலையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. ஜெனிவாவில் தீர்மானம், பிரேரணை, சர்வதேச விசாரணை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், போர் இடம் பெற்ற பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகை என்பதெல்லாம் வெந்து போய்க்கிடக்கும் தமிழர்களின் இதயங்களுக்கு உடனடியாக ஒத்தடம் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.

கடந்த முப்பது ஆண்டுகளாக இங்குள்ள தமிழர்கள் எத்தனையோ பேரைப் பார்த்துப் பேசித் தமது குறைகளை எடுத்துரைத்துச் சலிப்படைந்த நிலையில் உள்ளனர். எல்லாமே வெறும் ஏமாற்று வேலை என்பதுதான் அவர்களின் இறுதி முடிவாக உள்ளது.
காலம் கடந்தாவது வெற்றி தரும் என்ற அவர்களின் நம்பிக்கைகள் யாவும் முள்ளிவாய்க்காலுடன் தகர்ந்த பின்னர் இன்று எவரையும் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இப்போதெல்லாம் நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்களும், நம்பிக்கைத் துரோகிகளுமே உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் காணப்படுகின்றனர். தவிப்பவர்களின் வாயில் நீர் ஊற்றுவதற்கு இவர்கள் ஒரு போதுமே நினைப்பதில்லை. மாறாக தவித்த முயலை அடித்து எடுப்பதிலேயே குறியாக இருப்பார்கள், எமது அண்டை நாடான இந்தியா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது.

மத்திய அரசுடன் இணைந்து ஆட்சி செய்த போது வாயை மூடிக்கொண்டிருந்த கருணாநிதி போன்றவர்கள் இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதில் பயனென்ன? இவரைப் போன்றவர்களால் ஈழத்தமிழர்களின் இழந்த உரிமைகளையும், பூர்வீக மண்ணையும் திரும்பப் பெற்றுக் கொடுக்கமுடியுமா? காலத்துக்குக் காலம் வேடங்களை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேடதாரிகளை இனியும் நம்புவதில் பயன் எதுவுமே கிடைக்காது.

இனியும் கால தாமதம் ஏற்படுமாயின் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக இடங்கள் வேறு பெயர்களால் உச்சரிக்கப்படும் நிலை தோன்றிவிடும். மணலாறு, வெலிஓயாவாகத் திரிவுபெற்று வழக்கத்துக்கு வந்ததைப் போன்று வேறு பல இடங்களும் பெயர் மாற்றம் பெறப்போகின்றன.

திருகோணமலைக்கு நேர்ந்த கதி ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏற்படமாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்க முடியாத நிலையே இங்கு இன்று காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது போருக்குப் பின்னர் தமிழர்களின் நிலை “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே மாறியுள்ளது உரிமைக்காகப் போராடியவர்கள் இன்று நிலத்தை இழந்து பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை இழந்து, சுதந்திரத்தை இழந்து , நடமாடும் உரிமையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

எவ்வளவுதான் ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் இவர்களின் மன நிலையில் உடனடியாக மாற்றங்கள் வரப்போவதில்லை. மனக்காயங்கள் ஆறுவதற்குப் பல காலம் ஆகலாம். ஆகவே உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு இவர்களின் ரணங்களைக் கிளறுவதால் வேதனை தான் மிஞ்சும்.

இவர்களுக்குத் தேவை உடனடியாகப் பயன்தரும் நடவடிக்கைகளே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் அதுவே போதுமானது.

Tags: ,

Leave a Reply