ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் ஆணை வழங்குவதன் மூலம், இந்த நாட்டின் உள்விவகாரங்களில், வெளியார் தலையிட முடியாது என்ற தெளிவான செய்தியை சர்வதேசத்துக்கு மக்கள் சொல்லு வார்கள் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
களுத்துறை வேர்ணன் பெர்னாண்டோ மைதானத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் மாலை மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
“”அரசியலில் மக்களின் மனதை வெல்ல முடியாதவர்கள் சர்வ தேச சமூகத்திடம் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டை நேசிப்பவர்கள் எல்லாம் இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதற்காக ஆளும் கட்சியுடன் சேர்ந்து நிற்கின்றார்கள்.
நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராகப் போர் நடத்தவில்லை. இந்த நாட்டின் சகல சமூகங்க ளுக்கும் சுதந்திரமான நாடு கிட்ட வேண்டும் என்பதற்காகப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போரை நடத்தினோம்.
“”புலிகளின் பிரதிநிதிகளே கூட்டமைப்பு “”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலீட்டுக் கட்சியாகவே செயற்பட்டது. புலிகளின் சார்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கும் வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்த சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே.
இதையயல்லாம் தெரிந்து கொண்டே அரசு அவர்களுடன் பேச்சு நடத்தியது. மக்களின் மனதில் இருந்து இந்த உண் மைகளை எல்லாம் அழித்து விட முடியாது.
மக்களின் மனதை வெல்ல முடியாதவர்கள் – தங்களினால் அரசு ஒன்றை நிறுவ முடியாது என்பது தெரிந்தமையினால் – சர்வதேச சமூகத்திடம் சென்று தவறான நிலைப்பாட்டைத் தெரிவிக்கின்றனர். சர்வதேச சமூகம் நாட்டின் அதிகாரத்தைத் தங்களிடம் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இதைச் செய்கின்றனர்.” தெளிவான தீர்ப்பு வழங்குவார்கள்
“”இப்போது முழு நாடுமே அரசின் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளினால் நன்மையடைகின்றது. வடக்கும், கிழக்கும் கூட ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றது. ஆளும் தரப்புக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் ஆணை வழங்குவதன் மூலம், இந்த நாட்டின் உள் விடயங்களில் வெளியார் உள் நுழைய முடியாது என்ற தெளிவான செய்தியை சர்வதேசத்துக்கு மக்கள் வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராய்ச்சி, ரெஜினோல்ட் கூரே, நிர்மலா கொத்தலாவல மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

















