ஈழத்திலிருந்து இயங்கிவரும் இணையத்தள வானொலியான ‘சுடர் எஃப் எம்’ முதன் முறையாக ‘சுடர் விருதுகள்’ எனும் பெயரில் குறும்படங்கள், வீடியோ பாடல்களுக்கான போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. ஈழத்திரை, வீரகேசரி, மெட்ரோ நியூஸ், என்தமிழ்.காம் அனுசரணையோடு நடைபெற இருக்கும் ‘சுடர் விருதுகள்’ பற்றிய தகவல்களை சேகரிக்க, விழா ஏற்பாட்டாளர் திரு. யோகராசா சுதர்ஷன் அவர்களை தொடர்புகொண்டோம்.
குறும்பட போட்டி வைக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது??
ஈழத்தில் இருக்கும் கலைஞர்களுக்காக நிறைய விருதுகள் இருந்தாலும்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நிபந்தனைகளுடன் இருக்கிறது. இப்போதிருக்கும் சூழ் நிலையில் ஊக்கமளிக்கும் விதமாக விருதுகள் இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் கற்பனை திறனுக்கு தடை போடும் விதமாக இருக்கக்கூடாது. அதனால் நானே எம் வானொலி சார்பாக விருதுகள் வழங்கலாம் என முடிவெடுத்தேன். இதுவரை எந்த வானொலியும் விருதுகள் வழங்கும் போட்டியை நடத்தவில்லை. இதனால் நாமே ஆரம்பித்துவிட்டோம்.
போட்டியின் பொதுவான விதிகள் பற்றி சொல்லுங்கள்..??
போட்டியில் விதிகள் என்று எதுவுமே இல்லை.. பொதுவான விதிகள் என்று பார்த்தால் நம் நாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் தான் கலந்துகொள்ள முடியும். நம் நாட்டு கலைஞர்களால், இலங்கையில் தயாரிக்கப்பட்ட படைப்பாக இருத்தல் வேண்டும். வெளி நாடுகளில் வசிக்கும் ஈழத்தவர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. ஈழத்தில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகள் கருதி, இந்த முடிவை எடுத்திருக்கிறோம். குறும்படங்களுக்கு நேர எல்லை எதுவும் இல்லை.. எந்த வித கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்.
போட்டியின் பரிசுகள் விபரம் சொல்லுங்கள்..?
எல்லா வித கலைஞர்களுக்கும் விருதுகள் இருக்கிறது. இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை , எடிட்டர், இசையமைப்பாளர் என அனைத்து கலைஞர்களுக்கும் விருதுகள் இருக்கிறது. முதலில் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்படும்.
யார் யாரெல்லாம் நடுவர்களாக கலந்துகொள்கிறார்கள்..??
நடுவர்கள் குழாம் பற்றிய அறிவித்தல்களை இன்னும் சில நாட்களுக்குள் அறிவிப்போம். நிச்சயம் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடுவர்களாகத்தான் இருப்பார்கள்.
தனியே குறும்படத்திற்கென இல்லாமல், வீடியோ பாடல்களுக்கும் சேர்த்தே போட்டி வைத்ததின் காரணம் என்ன..??
ஒரே விழாவில் இரண்டு விருதுகளையும் கொடுக்கலாம் என யோசித்தோம். நம்மவர்களில் திறமை குறும்படத்தையும் தாண்டி பாடல்களிலும் அதிகளவு இருப்பதால் பாடல்களுக்கும் சேர்த்தே கொடுக்கலாம் என முடிவெடுத்தோம்.
இப்போட்டியில் கலந்துகொள்ள கலைஞர்கள் எந்த அளவு ஆர்வமாக இருக்கிறார்கள்..?
பல கலைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இன்னும் நிறைய பேரிடம் சென்றடையவில்லை. பலர் தொடர்பு கொண்டு கேட்டு, படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில் கணிசமான படைப்புகள் வந்துசேரும் என நம்புகிறோம்.
வருடா வருடம் நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா..???
ஓம். வருடா வருடம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தமிழ் புதுவருடப்பிறப்பு மாதத்தில் நடாத்த திட்டமிட்டிருக்கிறோம். தமிழ் வருடப்பிறப்பு அன்றுதான் சுடர் எஃப் எம்மிற்கு பிறந்த நாளும் கூட. இம்மாதம் மார்ச் 31ம் தேதிக்குள் கலைஞர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்க முடியும்.
விருது நிகழ்ச்சி எப்போது, எங்கே நடைபெற இருக்கிறது..??
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மாதல் 19ம் தேதி நடாத்த திட்டமிட்டிருக்கிறோம். சிலவேளைகளில் திகதி மாற்றப்படலாம். சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.
ஈழக்கலைஞர்களுக்கு விருது விழா ஏற்பாட்டாளர்களாக நீங்கள் கூற விரும்புவது..??
முழுக்க முழுக்க உங்களுக்கே உங்களுக்கான போட்டி இது. கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிபந்தனைகளை குறைத்து, உங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இந்த போட்டி. தவறாமல் ஓவொரு படைப்பாளியும் கலந்துகொள்ள வேண்டும். விழா அனுசரணையாளர்கள் ஈழத்திரை, வீரகேசரி, மெட்ரோ நியூஸ், என்தமிழ்.com ஆகிய ஊடகங்களுக்கு நன்றி.
















