போரில் வெற்றி கண்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தினால் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டவோ, ஜனநாயக சம்பிரதாயங்களை மீளக் கட்டி எழுப்பவோ இயலவில்லை.
ஆனால் அதற்குப் பதிலாக, அரசு அதிகார மயமான திசையை நோக்கியே பயணித்து வருகிறது. அங்க ஊடகவியலாளர்கள் அச்சத்துடனும், பயப் பீதியுடனுமே செயற்படும் நிலை உருவாகி உள்ளது.
நீண்ட காலமாக நடைபெற்ற போர், தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையே முரண்பாடான போக்குகளை அதிகரிக்கச் செய்துள்ளது. அர்த்தமுள்ள நல்லிணக்கத்துக்கு முன்னர், உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
போரில் உயிரிழந்தோரின் உறவுகளுக்கு, நடந்த துர்ப்பாக்கிய சம்பவங்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குவதோடு, குற்றம் இழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால் துன்பியல் சம்பவங்களை மறைக்கவே இலங்கை அரசு இன்னமும் முற்படுகிறது. அதனூடு சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவோ, தணிக்கவோ இயலாது; அதற்கு உதவப் போவதும் இல்லை.
இலங்கையில் வடக்கு, கிழக்கில் படையினரின் செயற்பாடுகள் குறித்து (தவறற்ற) மதிப்பீட்டைச் செய்ய வேண்டும் என்று உள்நாட்டில் வைக்கப்பட்ட குரலுக்கு, அரசு செவிசாய்த்திருப்பின், அது குறித்து ஜெனிவாவில் நடவடிக்கை எடுக்கும் நிலை வந்திருக்கமாட்டாது என்று டொனால்ட் கேம்ப், இலங்கை அரசு மீது இன்று (26.03.2014இல்) தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி வரைவு தொடர்பான தமது கட்டுரையில் விஸ்தாரமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே வேளை, நேற்று (25.03.2014 இல்) ஐந்து நாடுகள் இணைந்து சமர்ப்பித்த இறுதி வரைவு மூன்றாவது வரைவு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, நாளை (27.03.2014 இல்) அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைக்கு எடுத்துக் கொண்ட காலப் பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கைக்கொள்ளலாம் என்று புதிய தீர்மான வரைவு வகை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசின் விசாரணை மற்றும் அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பரிந்துரைகளில் பலவற்றைச் செயற்படுத்துவதில் காட்டப்பட்ட தாமதங்களும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடையிலான காலப் பகுதியில், இரண்டு தரப்புகளாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை நடத்த வேண்டும் என்ற புதிதான நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்படும் தீர்மான வரைவு மூன்றாவது தடவையாக திருத்தப்பட்டுச் சமர்ப்பிக்கப்படும் வரைவு பாதிப்புற்ற மக்களுக்கு தமிழ் மக்களுக்கு எந்த வகை சார்ந்து நலன் விளைவிக்கும் என்பது உடனடியாகவே எதிர்வு கூறப்படக் கூடிய ஒன்றல்ல.
எனினும், அனைத்துலக நாடுகள் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் பேணுவதில் ஊன்றிய அக்கறையும் ஆர்வமும் காட்டி தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு நிற்காது
அதன் ஒவ்வொரு அலகையும் அச்சொட்டாகச் செயற் படுத்த உந்துதல் கொடுக்குமா என்பதனை இலங்கை வாழ்தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.
மாநாடுகள், தீர்மானங்கள், பெரும் இழப்புக்களைச் சந்தித்து நிரந்தர பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு உதவட்டும்; எதிர்பார்க்கலாமா? ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறினும் நாட்டில் நல்லிணக்கம் உருவாக வழி திறக்குமா என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டியதே.

















