இலங்கை தமிழ் அகதிகளை வைத்து, அமெரிக்காவின் குவாண்டனாமோ முகாமைப் போன்ற ஒரு சிறைக்கூடத்தை, அவுஸ்திரேலியா அரசாங்கம் நடத்தி வருவாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
The Newyork Times செய்தித்தாள் இதனைத் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட போர் கைதிகளை தடுத்து வைப்பதற்காக 2002ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ்ஸினால் கியுபா – குவாண்டநாமோ விரிகுடாவில் இந்த தடுப்பு முகாம் உருவாக்கப்பட்டது.
இதில் சர்வதேச சட்டங்களை மீறிய பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற ஒரு முகாமையை அவுஸ்திரேலிய அரசாங்கம் விளாட்வுட்டில் நடத்தி வருவதாகவும், அதில் இலங்கைத் தமிழ் அகதிகளை நீண்டகாலமாக விசாரணை இன்றி தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கடந்த ஐந்து வருடங்களாக 46 இலங்கை அதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் மேலும் மியன்மார், ஆப்கானிஸ்தான் குவைட் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் புலனாய்வு தரப்பினரால் அவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது, சர்வதேச அகதிகள் சட்டத்தை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை வலியுறுத்தி இருந்த போதும், அந்த வலியுறுத்தல்களை அவுஸ்திரேலிய நிராகரித்திருந்ததாவும் The Newyork Times தெரிவித்துள்ளது.
















