ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹெரியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “”நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, இலங்கை அரசின் நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது.
இதன் காரணமாகவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டும் என்று இந்தப் பிரேரணை கோருகின்றது. இதைக் கருத்தில் கொண்டு, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், இலங்கையின் சிவில் போரின் போது இடம் பெற்ற பெரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை கேட்டுக்கொண்டுள்ளது. சிவில் சமூகப் பிரதிநிதிகளை தடுத்து வைத்தல், அவர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட அண்மைக்காலத்தில் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக நடத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பாக நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். மனித உரிமை பாதுகாவலர்கள் மீது நடத்தப்படும் எதிரீட்டு நடவடிக்கைகளே, இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் கடுமையான கரிசனையை வெளிப்படுத்த காரணமாயிற்று.
இலங்கையர்கள் நெகிழ்திறன் கொண்டவர்கள். போர் நடந்த காலத்தில் தங்களது திறனையும் மன உறுதியையும் அவர்கள் வலுவாக வெளிப்படுத்தியிருந்தனர். இப்பொழுது ஜனநாயகம், செழிப்பு மற்றும் சமாதானமான எதிர்காலத்தை கோரும் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இலங்கையர்கள் எல்லோரி னதும் பக்கமுமே அமெரிக்கா நிற் கின்றது. இந்த நாட்டின் வெற்றியின் பங்காளிகளாக அனைத்து இலங்கையர்களும் இருக்க வேண்டும் என்ற கனவு உண்மையாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

















