‘இனம்’ படத்தை ஏன் தடை செய்ய வேண்டும்? : வெளிச்சத்துக்கு வரும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஈழத்தில் 2009- ஆம் ஆண்டு விடுதலைப் போர் ஒரு முடிவை எட்டினாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான போராட்டம் உலகெங்கும் விரிந்து தமிழினத்துக்கு வலு சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சேனல் 4 உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் சிங்கள அரசுக்கு எதிரான அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாத கொடுங்கோல் அரசு தம்மால் இயன்ற அளவு கைக்கூலிகளுக்கு பணத்தைக் கொடுத்து தமிழினத்துக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டேயிருக்கிறது. அரசியலையும் தாண்டி சினிமா, இலக்கியம் உள்ளிட்டவைகள் மூலமாகவும் அது தமிழினத்துக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

அவற்றில் ஒன்று தான் ‘இனம்’ திரைப்படம். சந்தோஷ் சிவன் என்கிற மலையாளியும் அவருடைய சகாக்களும் தயாரித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இறுதிப்போரில் இறந்த (40,000 அரசின் கணிப்புப்படி) தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று சொல்லி வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும், ஈழப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு படத்திலேயே பல ஆதாரங்கள் உள்ளன.

இந்தப்படம் தமிழ்மக்கள் அனுபவித்த கொடுமைகளை உலகறியச் செய்யும் விதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிற தென்றும் அதன் காரணமாகவே இந்தப் படத்தைத் தாம் வாங்கி ரிலீஸ் செய்வதாகவும் இயக்குநர் லிங்குசாமி பெருமையோடு சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான படம் எப்படி லிங்குசாமிக்கு பிடித்துப் போனது என்ற சந்தேகம் எழும்.அந்த சந்தேகங்களைத்தான் இங்கே கேள்விகளாக்கியிருக்கிறோம். இந்த உண்மைகள் எல்லாவற்றைக்குமே ஒரு மனசாட்சியுள்ள தமிழராக லிங்குசாமி உடன்படுவார்.

ஆனால் ‘நான் சந்தோஷ்சிவனின் தீவிரமான விசிறி’ என்று சொல்லிவிட்ட பிறகு லிங்குசாமி இந்த உண்மைகளை ஏற்க மாட்டார் என்பதே உண்மை.

inam-film

போரில் இறந்து போன தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று டைட்டில் கார்டில் போடப்படும் இந்தப்படத்தின் அடையாளமான ஒட்டுமொத்த இலங்கையின் வரைபடத்தையும் தலைகீழாகப் போட்டிருப்பது ஏன்? தமிழர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம் என்றால் அதில் ஈழவரைபடம் தான் வந்திருக்க வேண்டும்? அப்படியானால் அமைதியாக இருந்த இலங்கையை விடுதலைப்புலிகள் இப்படி தலைகீழாக மாற்றி விட்டார்கள் என்று அர்த்தம் வருகிறதல்லவா..?

படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கருணாஸ் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு வருகிற விடுதலைப்புலிகள் கரும்பலகையில் வெள்ளை வேட்டியை கட்டி போர்க்காட்சிகளைத் திரையிட்டு காண்பிக்கிறார்கள். கருணாஸ் அச்சமும் அருவெறுப்புமாய் அவர்களைப் பார்க்கிறார். இந்தக்காட்சி சொல்லும் செய்தி என்ன?

குடும்பமே இல்லாதவர்களெல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்ததாகக் கதையைத் தொடங்கும் இளம்பெண், என் அம்மாவைப் பலர் சேர்ந்து கற்பழித்ததன் விளைவாக நான் பிறந்தேன். நான் பிறந்தது தெரியும், ஆனால் பிறப்பின் மூலம் தெரியாது என்று தொடங்கும்போதே எங்கள் குழந்தைகள் இப்படித்தான் உருவானர்கள் என்று சொல்லத் துணிந்த சந்தோஷ் சிவனின் வக்கிர சிந்தனை கண்டு தமிழர்களாகிய எங்களுக்கு மனம் வலிக்கிறது. உங்களுக்கு?

ஒரு இடத்தில், இயக்கத்திலிருக்கும் அவன் நன்றாகச் சோறு சாப்பிட்டிருக்க மாட்டான் அவனுக்கு வாய்க்கு ருசியாக சோறு ஆக்கிப் போடவேண்டும் என்று சொல்கிறார் சுனாமி அக்கா என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் சரிதா. இன்னொரு இடத்தில் ஒரு விடுதலைப்புலியே நல்லசோறு சாப்பிட்டு நாளாயிற்று என்று சொல்கிறார். மற்றொரு இடத்தில் இரவில் ஒரு வீட்டுக்குள் நுழைகிற போராளி அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாலைக்குடித்து விட்டு வெறிபிடித்த மாதிரி மாதுளம்பழத்தைக் கடிக்கிறார். இவற்றின் மூலம் இயக்குநர் சந்தோஷ்சிவன் சொல்ல வருவதென்ன?

லீடர் செத்துட்டாரு. அவர் சாகும்போது நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன் என்று உடலெங்கும் கட்டுகளோடு மருத்துவமனையில் படுத்திருக்கும் மீசை முளைக்காத சிறுவன் சொல்கிறான். இந்தக்காட்சி விளக்கும் செய்திகள் எவை?

இயக்கத்தில் சேர்ந்த ஒருவரைப் பார்த்து, உன்னுடைய படிப்புக்கு நீ எங்கியோ போயிருக்க வேண்டியவன் என்று சரிதா வருத்தப்படுவது எதனால்? தமிழர் பகுதிகளில் ஒரு புத்தபிட்சு எதற்கு வந்தார்? எப்படி வந்தார்? என்பனவற்றைத் தாண்டி அவர் தன்னுடைய தண்ணீர் சேமிக்கும் பாத்திரத்துக்குள் தெரியாமல் வந்துவிட்ட மீன்குஞ்சுகளைத் திரும்பவும் கால்வாயில் விடுவதும் தன் பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொடுப்பதும் எதை சுட்டிக்காட்டுகிறது?

சுனாமி அக்கா வீட்டில் படுத்த படுக்கையில் இருக்கும் வயதானவர் ஒரு சிறுவனிடம் அருகில் இருக்கும் அவருடைய பழைய போட்டோ ஆல்பத்தை திறந்து காட்டச் சொல்கிறார். அதில் அவருடைய புகைப்படங்களுடன் பல பெண்களின் கவர்ச்சிப் படங்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த புகைப்படங்களை எல்லாம் அவர் வெறியோடு பார்த்து ரசிக்கிறாரே? இந்த வக்கிரமான காட்சி பற்றி சந்தோஷ் சிவனின் அபிப்ராயம் என்னவோ? அல்லது இப்படிப்பட்ட ஒரு கேவலமான காட்சியை வைக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

உயிரிழந்த சிங்கள ராணுவத்தினரின் கையில் ஒரு குழந்தையின் புகைப்படம் இருக்கிறது, அது மக்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதை எடுத்துப் பார்த்து விட்டுத் திரும்பவும் அங்கேயே வைக்கிற மாதிரியான காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்? குண்டுவெடிப்பின் போது உடைந்து சிதறிடும் பொம்மைகளில் விநாயகர் பொம்மை, இயேசுநாதர் பொம்மையும் சிதறிக் கிடப்பது நடந்த வரலாறு. கூடவே புத்தர் சிலையும் உடைந்து கிடக்கிறதே? அது எதற்காக?

போர்க்காட்சியன்றில் மக்களுக்கு மத்தியிலிருந்து விடுதலைப்புலிகள் சுடுவதாகவும் மக்களை விலகிப்போகச் சொல்லிவிட்டு சிங்கள இராணுவம் சுடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லையா? இந்தவெற்றி பற்றிச் சொல்லுங்க கேப்டன், என்று ஒருவன் கேட்க அதற்கு, மிகவும் வருத்ததுடன் இவர்களெல்லாம் நம் நண்பர்கள் அவர்கள் செய்த தவறினால் இறந்திருக்கிறார்கள், இதை எப்படிக் கொண்டாட முடியும்? என்று இராணுவதளபதி கேட்பது போன்ற காட்சி சொல்கிற அர்த்தம் என்ன?

தமிழகத்துக்குப் போய் விடலாம் என்று தப்பி வருகிற வேளையில், ரஜினி, ஆயிஷா (ஒருவர் தமிழ் ,இன்னொருவர் முஸ்லிம்) ஆகிய இரு பெண்களையும் சிங்கள இரணுவத்தினர் பாலியல் வன்குணர்வுக்குட்படுத்தி அதை மொபைலில் படம் பிடிக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்தப்பெண் நீர்நிலையன்றில் கறையைக் கழுவும் காட்சியும் இடம் பெறுகிறது? இந்தக்காட்சி சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்கள் நிகழ்த்தும் கொடுமைகளை வெளிக்காட்டவா? வெற்றி எக்காளமா?

குடும்பமே இல்லாதவர்களாகச் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்தோம் என்று கதையைத் தொடங்கும் பெண் சொல்லும் கதையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாதிப்பேர், இறந்து விட்டார்கள், மீதிப்பேர் தமிழகத்துக்குத் தப்பி வந்து விட்டார்கள். அப்படியிருக்கும் போது, பாலியல் வன்புணர்வின் காரணமாக கர்ப்பம் தரித்திருக்கும் அவர், என் குழந்தையையும் என்னைப் போல அனாதையாக விட மாட்டேன் என் குடும்பத்தைத் தேடி நான் போவேன் என்று சொல்லி படத்தை முடிப்பதன் மூலம், உன்னைக் கற்பழித்த சிங்களவனைத் தேடிக்கண்டு பிடித்துக் குடும்பம் நடத்து, அதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்று சொல்ல வருகிறாரா?

ரெண்டு நெடுக்கு நாலு குறுக்கு ஊர்வலம், நீயுந்தான் போகணும் நானுந்தான் போகணும் சந்தோஷமா வாழணும் என்று படம் முடிகிற நேரத்தில் ஒலிக்கும் பாடல் வரிகள் சொல்வதென்ன?
இப்படி ‘இனம்’ படம் தடை செய்யப்பட வேண்டியதற்கான காரணங்களை அடுக்கிக் கோண்டே போகலாம்.

இந்த நிதர்சனமான உண்மைகள் தெரிந்திருந்தும் கூட லிங்குசாமி போன்ற திறமையான தமிழ்சினிமாக் கலைஞர்கள் அதை திட்டமிட்டு மறைப்பது யாருடைய நலனுக்காக..?

Tags: , ,

Leave a Reply