தமிழர் மரபுரிமை மாதமாக வருடத்தின் முதல் மாதமான தை மாதத்தை அங்கீகரிப்பதற்கான இறுதித் தீர்மானம் ஒன்ராரியோவின் மூன்று பிரதான கட்சிகளாலும் ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டு சட்டமூலமாக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மார்ச் 25ம் திகதி, ஒன்ராரியோவின் ஆளுநர் நாயகம் டேவிட் ஒன்லி அவர்கள், சட்டச்சரத்து 156 ல் கையெழுத்திட்டு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை இச்சரத்திற்கு வழங்கியயள்ளார்.
தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும்படி கோரும் இத்தீர்மானத்தை பிரின்ஸ் எட்வேர்ட் ஹேஸ்ரிங்ஸ் உறுப்பினர் கௌரவ ரொட் ஸ்மித் ஐந்தாவது தடவையாக முன்வைத்திருந்த நிலையில், ஏனைய இரு பிரதான கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கி இந்தத் தீர்மானம் வெற்றிபெற அங்கீகாரம் வழங்கினர்.
கௌரவ ரொட் ஸ்மித் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில், ஒன்ராரியோவில் வாழும் தமிழர்கள் இந்த மாகாணத்திற்கு பல்வேறு வகையிலும் வழங்கிவரும் சேவைகளைக் கௌரவிக்கும் வகையில், இந்தப் பிரேரணை அங்கீகாரம் பெற்றிருப்பதையிட்டு பெருமையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒன்ராரியோ மாகாணத்தில், கிட்டத்தட்ட 300 ஆயிரம் தமிழர்கள் வாழ்வதாக அண்மைய கணிப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கென உலகிலேயே முதன்முதலில் இத்தகைய ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

















