தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப் போவது இலங்கையே – யஷ்மின் சூகா

un-human-rights-council_0

ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கையின் போர் மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் ஆலோசகர் யஷ்மின் சூகா.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதும்,அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்து இருப்பதும் தெரிந்ததே.

அவ்வாறான ஒரு நிலை நீடிக்குமானால் என்ன நடக்கும் என்பது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யஷ்மின் சூகா, பொருளாதாரத் தடைகள் பல்வேறு விதமாக செயற்படுத்தப்படக் கூடும் என்றும் தெரிவித்தார்.

அவை பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. ஆனால் சர்வதேச விசாரணைக்கு அவர்கள் இணங்க மறுத்தால் அவை மிக பாரதூரமானவையாக இருக்கும் என்பது மட்டும் எனக்குத் தெரியும் என்றார் யாஸ்மின்.

சர்வதேச விசாரணையை நிராகரிப்பது என்பது ஆணையாளர் நவிப்பிள்ளையை நிராகரிப்பதாக கருதக்கூடாது. அது ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக இருக்கும் என்றார்.

இலங்கை அரசு மனித உரிமைகள் சபை தீர்மானத்தை புறக்கணிக்க முடிவு செய்யுமானால் பலவிதமான தடைகள், உதாரணமாக அரச அதிகாரிகளின் பயணங்களுக்குத் தடைகள், சொத்துகள் முடங்கச் செய்தல்,வெளிநாட்டு முதலீடுகளுக்கு முற்றுப்புள்ளி, அமெரிக்க டொலர் மூலமான தொழில் பரிவர்த்தனை போன்றவை செயற்படுத்தப்படலாம். ஐ.நா. மனித உரிமை சபை உறுப்பு நாடுகளுக்கு இடையிலும்,பிராந்திய குழுமங்களுக்கு இடையிலும் விரிவான விவாதங்களின் பின்னர் இது முடிவு செய்யப்படும்.

அவர் மேலும் கூறுகையில்;
கிரிமியா தொடர்பாக அண்மையில் ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார தடைகள் விதித்தமையை அண்மையில் பார்த்தோம். இந்த நிலை இலங்கைக்கு வேண்டாம். மனித உரிமைகள் சபையுடன் அது ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இலங்கைக்கு வராமலே நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதையும்அவர் சுட்டிக்காட்டினார். யஷ்மின் சூகா இலங்கையின் போர்க் காலத்தில் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பில், ஐ.நா செயலாளர் பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவில் அங்கம் வகித்தவர்களில் ஒருவராவார்.

Tags: , ,

Leave a Reply