நுவரெலியா வசந்த கால நிகழ்வு இன்று ஆரம்பம்

horse

நுவரெலியாவின் வருடாந்த ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30மணிக்கு நுவரெலியா நகர பிரதான வீதியில் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பெகமகே தலைமையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணி வகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகவுள்ளன.

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் சிறப்பு அதிதியாக அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நுவரெலியாவில் கலை, கலாசார, விளையாட்டு, களியாட்ட நிகழ்வுள் தினந்தோறும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பெகமகே கூறுகையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்புகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் போது நுவரெலியா – விக்டோரியா பூங்காவில் இரண்டு நாட்களுக்கு மலர் கண்காட்சி போட்டியையும், நுவரெலியா கிறகரி தெப்பக்குளத்தில் ஒரு நாள் படகோட்டப் போட்டியும், நுவரெலியா குதிரை பந்தய திடலில் குதிரைப் பந்தய போட்டிகளும், குதிரை பந்தய திடலை சுற்றியுள்ள பிரதான பாதையில் மோட்டார் காரோட்டப் போட்டியும், நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் உட்பட பல போட்டிகள் நடைபெறவுள்ளன என்றார்.

Tags: , ,

Leave a Reply