நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம், மக்களை பிழையாக வழிநடத்தி வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடு பாரியளவிலான கடன் சுமையில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் குறைவடைந்து செல்வதாக அரசாங்கம் ஊடகங்களில் புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், உண்மையில் மக்களின் கொள்வனவு சக்தி பாரியளவில் பலவீனமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் மெய்யான பொருளாதார நிலைமைகளை அரசாங்கம் வெளிப்படுத்தாது, மக்களை ஏமாற்றும் வகையிலான தகவல்களையே வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பொருளாதாரம் நாளுக்கு நாள் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் ஜனாதிபதிக்கு தேவையான வகையில் அமுல்படுத்தப்படுவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தவறிழைத்தால் தண்டிக்கப்படுவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

















